கொரோனாவால் நிதி நெருக்கடி..: எம்எல்ஏக்களின் சம்பளத்தில் 30 சதவீதத்தை குறைக்க உத்தரகாண்ட் அரசு நடவடிக்கை!

டேராடூன்: எம்எல்ஏக்களின் சம்பளத்தில் 30 சதவீதத்தை குறைக்க உத்தரகாண்ட் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தற்போதுவரை ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. ஊரடங்கால் பல்வேறு மாநிலங்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன.  இந்நிலையில், கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் எம்எல்ஏக்களின் சம்பளத்தில் 30 சதவீதத்தை குறைக்க உத்தரகாண்ட் அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக, கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக முதல்வர், மந்திரிகள், எம்.எல்.ஏக்களின் சம்பளத்தில் 30 சதவிகிதத்தை குறைத்துக்கொள்வது என்று  கடந்த ஏப்ரல் 8ம் தேதி உத்தரகாண்டில் முடிவு செய்யப்பட்டது. எனினும், எம்.எல்.ஏக்கள் சம்பளத்தை விட்டுக்கொடுப்பதில் முரண்பாடுகள் நிலவுவதாக எதிர்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியது. பாஜக எம்.எல்.ஏக்கள் 30 சதவிகிதத்திற்கும் குறைவாகவே பங்களிப்பு அளிப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

இதையடுத்து, இந்த சர்ச்சைக்கு முடிவு கட்டும் வகையில், அவசர சட்டம் பிறப்பிக்க உத்தரகாண்ட்டில் ஆளும் பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அவசர சட்டத்திற்கு தான் அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை 30 சதவிகிதம் சம்பள பிடித்தம் செய்யப்படும் என்று அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்டில்  ஒரு எம்.எல்.ஏவுக்கு மாத சம்பளமாக 2.04 லட்சம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: