×

முதல்வர் வேட்பாளர் யார்? அதிமுகவில் உச்சக்கட்ட மோதல்: அவசர ஆலோசனை கூட்டம் பாதியில் முடிந்தது

சென்னை: அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் அமைச்சர்கள் இடையே மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் அதிமுக மூத்த நிர்வாகிகள் சென்னை, தலைமை அலுவலகத்தில் அவசரமாக கூடி நேற்று ஆலோசனை நடத்தினர். ஆனால் கூட்டத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்க முடியவில்லை. இதனால் எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் பாதியிலேயே முடிந்தது. தமிழகத்தில் 2021 மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் சில மாதங்களே உள்ளன. தேர்தலையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பணிகளை தொடங்கியுள்ளன. இந்நிலையில், வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் பிரசாரம் செய்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டவர்கள் எடப்பாடி பழனிசாமிதான் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என்று கூறினர். அதேநேரம் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் தேர்தல் முடிந்த பிறகுதான் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும், கட்சி தலைமை கழக நிர்வாகிகள் இதுபற்றி அறிவிப்பார்கள் என்றும் கூறி வருகிறார்கள். சில அமைச்சர்களிடம் கேட்டபோது, அதற்கு பதில் அளிக்காமல் மவுனம் காத்து வருகிறார்கள். மூத்த அமைச்சர்கள், முன்னணி தலைவர்களும் தங்கள் கருத்துகளை தெரிவிக்காமல் உள்ளனர். இது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவுக்குள் இதுபோன்ற ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக பாஜ துணை தலைவர் வி.பி.துரைசாமி நேற்று முன்தினம் சென்னையில் பேட்டி அளித்தபோது, “வருகிற தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக - பாஜ இடையேதான் போட்டி. பாஜ தலைமையில்தான் தேர்தல் கூட்டணி அமைக்கப்படும்” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இது அதிமுக தலைமைக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் தற்போதுள்ள பிரச்னையை பயன்படுத்தி, பாஜ அதிக சீட்டுகளை எதிர்பார்த்து இப்போதே காய் நகர்த்த தொடங்கியுள்ளதாகவே இது கருதப்படுகிறது.

இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி மற்றும் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், அமைப்பு செயலாளர் மனோஜ் பாண்டியன் ஆகியோர் நேற்று பகல் 11.30 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். இவர்கள், அதிமுகவில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் பிரச்னைகள் குறித்து விவாதித்தனர். குறிப்பாக, வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக யாரை அறிவிக்க வேண்டும் என்பது குறித்து அமைச்சர்கள் இடையே நடைபெற்று வரும் மோதல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அடுத்து, பாஜ துணை தலைவர் வி.பி.துரைசாமி, பாஜ தலைமையில்தான் தமிழகத்தில் கூட்டணி அமையும் என்று கூறி இருப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்தது. ஆனால் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு எடுக்க முடியவில்லை. ஆளாளுக்கு பலவித கருத்துகளை தெரிவிக்கின்றனர். இதனால் இப் பிரச்னையில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் பாதியிலேயே முடிந்தது.

கூட்டத்துக்கு பிறகு கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
அதிமுக வளர்ச்சிக்காக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக தேர்தல் கமிஷன் சில கருத்துகளை கேட்டிருக்கிறது. அதற்கு ஏற்றவாறு அதிமுக சொல்ல வேண்டிய கருத்துகளை தயார் செய்வதற்காக இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு துணையாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள் செயல்பட்டு வருகிறார்கள். கொரோனா  சூழலிலும் இந்திய துணைக்கண்டத்தில் ஒரு முன்மாதிரி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

முதல்வர் வேட்பாளர் யார் என்பதை உரிய காலத்தில், உரிய நேரத்தில் கட்சி தலைமை அறிவிக்கும். பாஜ தலைமையில்தான் கூட்டணி என்று வி.பி.துரைசாமி பேசியுள்ளார். நேற்று வரை  ஒரு கட்சியிலும், அதற்கு முன்பாக இன்னொரு கட்சியிலும் இருந்தவர் இப்போது சேர்ந்துள்ள கட்சியில் ஏதாவது ஆதாயம் கிடைக்க வேண்டும் என்று அப்படி சொல்லியிருக்கிறார். தமிழக பாஜ தலைவர் முருகன் 2 நாட்களுக்கு முன் அளித்த ஒரு பேட்டியில் கூட, `அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாஜ இருக்கிறது’’’’ என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

* சி.வி.சண்முகம் மிரட்டல்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுகவில் பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது அமைச்சர்களின் மாவட்டங்கள் மட்டும் பிரிக்கப்படவில்லை. இதனால் கட்சியில் கடும் அதிருப்தி நிலவியது. அதில் தமிழகத்திலேயே கட்சியில் பெரிய மாவட்டமாக விழுப்புரம் உள்ளது. இதனால் அதை 2ஆக பிரித்து தனது ஆதரவாளரான லட்சுமணனுக்கு வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதை ஏற்கனவே சி.வி.சண்முகம் மறுத்து விட்டார். நேற்று அவரை கட்சி அலுவலகத்துக்கு கட்சியின் முன்னணி நிர்வாகிகள் வரவழைத்தனர். அப்போது உங்கள் மாவட்டத்தில்தான் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

அதனால் நீங்கள் விரும்பும் 3 சட்டமன்ற தொகுதிகளை கூறுங்கள். அதை மட்டும் ஒரு மாவட்டமாக அறிவிக்கிறோம். மீதம் உள்ள 3 தொகுதியை மற்றொரு மாவட்டமாக அறிவிக்கிறோம் என்று கூறினர். இதை சொன்னதும் கோபமான சி.வி.சண்முகம், விழுப்புரத்தில் இருந்து ஒரு தொகுதி கூட பிரிக்கக் கூடாது. பிரித்தால் கட்சியை உடைத்து விடுவேன். விழுப்புரத்தில் கட்சியே இருக்காது. முடிந்தால் நீங்களே பிரித்துப் பாருங்கள் என்று மூத்த தலைவர்களுக்கு சவால் விடும் வகையில் கூறிவிட்டு, அவர்களது பதிலைக் கூட எதிர்பார்க்காமல், புறப்பட்டு தனது காரில் ஏறி பறந்து சென்று விட்டார். இதனால் மூத்த தலைவர்கள் கடும் அதிர்ச்சியில் நீண்ட நேரம் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தனர்.

* எடப்பாடியை முன்மொழிய ஓ.பன்னீர்செல்வம் தயக்கம்
முதல்வர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள், மூத்த தலைவர்களிடையே கடுமையான மோதல் எழுந்துள்ளது. இது தொண்டர்களிடம் கடுமையான குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் நேற்று இரவு துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘‘தொடர்ந்து 3வது முறையாக 2021ம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அதிமுகவின் இலக்கு. அதுவே ஜெயலலிதாவின் கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள்.

தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த பதிவில் கூட, எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில், அமைச்சர்களும், மூத்த தலைவர்களும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று மறைமுகமாக எச்சரிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார். அவரது இந்த டிவிட்டர் அறிக்கை அதிமுக வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : candidate ,Chief Ministerial ,conflict ,Emergency consultation meeting ,AIADMK , Who is the Chief Ministerial Candidate ?, AIADMK, Peak Conflict :, Emergency Consultative Meeting
× RELATED அதிமுக உட்கட்சி மோதல் முடிவுக்கு...