கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டு 100 நாள் நிறைவு

சென்னை: கொரோனா காரணமாக கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டு நேற்றுடன் 100 நாட்கள் முடிவடைந்துள்ளது. சென்னையில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கொரோனா தீவிரமாக பரவி வந்தது. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக காய்கறி, மலர், பழம் உள்ளிட்டவற்றை வாங்கி சென்றனர். ஆனால் தனிமனித இடைவெளி முறையாக பின்பற்றாத காரணத்தால் கோயம்பேடு மார்க்கெட் மூலம் கொரோனா வேகமாக பரவத் தொடங்கியது. குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்துசென்ற வியாபாரிகள் மூலம் பல மாவட்டங்களில் கொரோனா பரவத் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஆசியாவின் மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டை மூடுவதாக கடந்த மே 5ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.

தொடர்ந்து, திருமழிசையில் தற்காலிகமாக மார்க்கெட் அமைக்கப்பட்டது. தற்போது 200 கடைகளுடன் கூடிய மொத்த விற்பனை மட்டுமே அங்கு நடக்கிறது. இதேபோல், பழ சந்தை மாதவரம் பேருந்து நிலையத்திலும் செயல்பட்டு வருகிறது.

தற்காலிக மார்க்கெட் நகரில் இருந்து தொலைவில் இருப்பதால் சில்லரை வியாபாரிகள் வருவதில்லை என்று மொத்த வியாபாரிகள் கூறுகின்றனர். இதனால் கிலோ கணக்கில் காய்கறிகள் அழுகி வீணாவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் கோயம்பேடு மார்க்கெட்டை மூடி நேற்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் தற்போது கொரோனோ பரவல் குறைந்துள்ள நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டை மீண்டும் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: