×

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.7 சதவிகிதமாக குறைந்துள்ளது: தலைமை செயலாளர் கே.சண்முகம் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், கொரோனா நோய் தொற்று கட்டுப்படுத்த, தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் கே.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. அரசு தலைமை செயலாளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுபடி, மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக ஆய்வு செய்யப்படுகிறது.  நோய் தடுப்பு பணிகளை மேலும் தீவிர படுத்துவதற்கு உரிய அறிவுரைகளும், வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை பணிகள் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா தொற்று கண்டறிவதற்காக மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி, திருவள்ளூர், திருத்தணி திருவேற்காடு, பூந்தமல்லி நகராட்சிகள், 14 ஊராட்சி ஒன்றியங்களில் மற்றும் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று சிறப்பு மருத்துவ முகாம்கள் வாயிலாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கு, தொடர் பரிசோதனை காரணமாக ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தேவையான சிகிச்சை வழங்கியதன் காரணமாக தற்போது எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

தொழிற்சாலைகளில் ஒருங்கிணைந்து கண்காணிக்க நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகிறது. சிறப்பு குழுக்கள் அமைத்து அரசின் விதிகளை பின்பற்றி நடக்கிறதா என உறுதிசெய்யப்படுகிறது. இதன்காரணமாக தொற்று சற்று குறைந்துள்ளது.
கடந்த மாதங்களில் 2.6 சதவிகிதமாக இருந்த இறப்பு விகிதம் தற்போது 1.7 சதவிகிதமாக குறைந்துள்ளது. அதை ஒரு சதவிகிதத்திற்கும் கீழ் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை போல இரண்டு கள ஆய்வு பணி குழுக்கள் அமைக்கப்படவுள்ளது.

ஆவடி, பூந்தமல்லி ஆகிய பகுதிகளை கண்காணிக்கவும், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளை கண்காணிக்கவும் இரண்டு குழுக்கள் இந்திய ஆட்சி பணி அலுவலர் தலைமையில் அமைக்கப்படவுள்ளது. கூடுதலாக 50-60 அளவில் உள்ள சிறப்பு மருத்துவ முகாம்கள், 100 வரையில் முகாம்கள் நடத்தி பரிசோதனைகள் மேற்க்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளரும், சுகாதாரத் துறை செயலாளருமான டாக்டர். ஜெ.ராதாகிருஷ்ணன், காவல்துறை தலைமை இயக்குநர் ஜே.கே.திரிபாதி, மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


Tags : K. Shanmugam ,Corona ,Tiruvallur district ,district , Tiruvallur district, Corona mortality has come down by 1.7 percent, Chief Secretary K. Shanmugam informed
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...