போலீசார் சோதனையில் 100 கிலோ குட்கா பறிமுதல் இருவர் தப்பி ஓட்டம்

திருநின்றவூர்: ஆவடி அருகே திருநின்றவூர் சோதனைச்சாவடியில் போலீசாரை கண்டதும் காரில் வந்த இரு மர்ம நபர்கள் தப்பி ஓடினர். ஆவடி அடுத்த திருநின்றவூர், கொட்டாம்பேடு சோதனைச்சாவடியில் எஸ்.ஐ சந்திரசேகர் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் நேற்று காலை ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஒரு கார் சந்தேகத்திற்கு இடமாக வேகமாக வந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த, போலீசார் காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முற்பட்டனர். அப்போது, கார் நிற்காமல் வேகமாக சென்றது . இதனையடுத்து, அங்கிருந்த போலீசார் வயர்லெஸ் மூலம் ரோந்து போலீசாருக்கு தகவல் கொடுத்து காரை மடக்கி பிடிக்க உத்தரவிட்டனர். பின்னர், ரோந்து போலீசார் விரைந்து வந்து காரை பின்தொடர்ந்து விரட்டி உள்ளனர்.

அப்போது, காரை கொசவன்பாளையம் பகுதியில் உள்ள கூவம் ஆற்று கரை ஓரமாக விட்டு, விட்டு அங்கிருந்து இரண்டுபேர் தப்பி ஓடிவிட்டார்கள். பின்னர், போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது, அந்த காரின் டிக்கியில் 100கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் என கூறப்படுகிறது. பிறகு, போலீசார் காரை பறிமுதல் செய்து திருநின்றவூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போலீசார் காரின் பதிவு எண்ணை வைத்தும், கண்காணிப்பு கேமரா மூலமாகவும் தப்பி சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: