ஆவடி மாநகராட்சியில் 2,300 பேர் கொரோனாவால் பாதிப்பு: ஒரே நாளில் 3 பேர் பலி

ஆவடி: ஆவடியை அடுத்த கோயில்பதாகை மெயின்ரோட்டில் 84வயது மதிக்கத்தக்க முதியவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 8ந்தேதி அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை பரிசோதனை செய்த போது தொற்று இருப்பது தெரிய வந்தது பின்னர், அவரை உறவினர்கள் மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை பலனின்றி முதியவர் நேற்று முன்தினம் மதியம் பரிதாபமாக இறந்தார். அதே போல, ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், ஸ்ரீசக்தி நகர், அகநானூறு தெருவில் வசித்து வந்த 68வயது முதியவருக்கு தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து அவரை உறவினர்கள் சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மதியம் முதியவர் பரிதாபமாக இறந்தார்.

மேலும், கடந்த மாதம் 26ந்தேதி ஆவடி, ராமலிங்கபுரம், பெரியார் தெருவைச் சார்ந்த 48வயது மதிக்கத்தக்க ஆண் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனை அடுத்து, அவரை உறவினர்கள் பூந்தமல்லி அருகே தண்டலத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து, கொரோனா தொற்று காரணமாக 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தது குறித்து ஆவடி மாநகராட்சி நிர்வாகத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், சுகாதார ஆய்வாளர்கள் பிரகாஷ், ரவிச்சந்திரன், ஜாபர் ஆகியோர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சடலங்களை கைப்பற்றினர். பின்னர், அவர்கள் ஆவடி மற்றும் திருமுல்லைவாயலில் உள்ள எரிவாயு தகன மேடையில் உறவினர்கள் முன்னிலையில் 3 சடலங்களையும் தகனம் செய்தனர். ஆவடி மாநகராட்சியில், கொரோனா தொற்றுக்கு இதுவரை 2,300க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கொரோனா தொற்று காரணமாக இதுவரை 62 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: