இ-பாஸ் இல்லாமல் செல்லும் வாகனங்கள் பறிமுதல்: போலீசார் அதிரடி சோதனை

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இ பாஸ் இல்லாமல் செல்லும் வாகனங்களை, வண்டலூர் சோதனை சாவடியில் போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்கின்றனர். சென்னையை அடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி, செங்கல்பட்டு எஸ்பி கண்ணன், ஓட்டேரி இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் தலைமையில் வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே ஜிஎஸ்டி சாலையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று காலை முதல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பைக், கார் உள்பட பல்வேறு வாகனங்களில் அதிகளவில் மக்கள் சென்றனர். போலீசார், அனைத்து வாகனங்களையும் மறித்து தீவிர சோதனை நடத்தி, இ பாஸ் இல்லாமல் சென்ற வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும், பல வாகன ஓட்டிகளை எச்சரித்து திருப்பி அனுப்பினர். இதனால், சொந்த ஊரான தென் மாவட்டங்களுக்கும், வேலைக்காகவும் செங்கல்பட்டு மாவட்டத்தை கடந்து சென்றவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

Related Stories: