×

திமுகவில் இருந்து கு.க.செல்வம் டிஸ்மிஸ்: மு.க.ஸ்டாலின் நடவடிக்கை

சென்னை: கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக கு.க.செல்வம் எம்.எல்.ஏ.,வை திமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்து மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். சென்னை ஆயிரம்விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க.செல்வம். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லியில் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து பேசினார். இதை தொடர்ந்து, கு.க.செல்வம் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், அவர் வகித்த திமுக தலைமை நிலைய அலுவல செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன் நீக்கக்கூடாது? என்று திமுக சார்பில் கு.க.செல்வத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர் அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்று திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு:திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்ட கு.க.செல்வம், கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அவரிடம் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு அளித்த பதில் ஏற்றுக் கொள்ளும்படி இல்லாத காரணத்தால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : DMK ,KK Selvam ,MK Stalin , DMK, KK Selvam, Dismissal, MK Stalin
× RELATED கொரோனா தொற்றுக்கு திமுக கவுன்சிலர் பலி