×

சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் மாணவர்கள், முதியோர் பங்கேற்க வேண்டாம்: தமிழக அரசு வேண்டுகோள்

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தின நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளும், பொதுமக்களும், மாணவர்களும், பள்ளி குழந்தைகளும் பங்கேற்பர். இந்த ஆண்டு கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டாம். சுதந்திர போராட்ட தியாகிகளின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாகவும், மாவட்டந்தோறும் 10 சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பொன்னாடை போர்த்தி உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும்  மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தலைமை செயலக வளாகத்தில், இனிப்பு பெட்டகம் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு முதல்வரின் சார்பாக சமூகநல துறை அமைச்சர் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிக்கு நேரில் சென்று, இனிப்பு பெட்டகத்தை வழங்குவார். சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்கள பணியாளர்களை சிறப்பிக்கும் விதமாக, அவர்களுக்கு முதல்வர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிப்பார். சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தையொட்டி சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. விமான நிலையம், ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : celebrations ,senior citizens ,Government of Tamil Nadu ,Independence Day , Independence Day Celebration, Event, Students, Senior Citizens, Government of Tamil Nadu
× RELATED முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குப்பதிவு தொடங்கியது