உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இந்திய அளவில் தமிழகம் சாதனை: அமைச்சர் தகவல்

சென்னை: கோவிட்-19 தொற்று காலத்திலும் நெறிமுறைகளை உருவாக்கி தடையின்றி உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு தமிழகம் சாதனை படைத்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற உடல் உறுப்பு தான தின நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டிரான்ஸ்டான் ஆண்டு அறிக்கையினை வெளியிட்டார். பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை தானம் அளிப்பதன் மூலம் 8 நபர்களுக்கு வாழ்வளிக்க முடியும். தமிழகத்தில் இதுவரை 1,382 கொடையாளர்களிடமிருந்து 8,163 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 5 முறையாக தமிழகம் முதலிடம் வகித்து மத்திய அரசின் விருதுகளை பெற்றுள்ளது.  

தமிழ்நாட்டில் கோவிட்-19 தொற்று காலத்திலும் நெறிமுறைகளை உருவாக்கி தடையின்றி உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு தமிழகம் சாதனை படைத்துள்ளது. தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத் துறை பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, உடல் உறுப்பு தானத்தை ஒரு மக்கள் இயக்கமாகவே மாற்றி வருகிறது.  இந்நாளில் உடல் உறுப்பு தானம் செய்வோம், இறந்த பின்பும் உயிர் வாழ்வோம் என்ற உறுதிமொழியை நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஏற்றுக் கொள்வோம் என்றார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: