‘உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா ஆபிசர்ஸ்’ ஆளே இல்லாத வீட்டுலயும் தகர தடுப்ப வச்சுட்டாங்க...

சென்னை: கடந்த 3 ஆண்டுகளாக யாருமே வசிக்காத வீட்டில் கொரோனா பாதிப்பு என கூறி, கணக்கு காட்டுவதற்காக, அங்கு தடுப்பு மெட்டல் ஷீட் வைத்துள்ளனர். இதை பார்த்த பொதுமக்கள், ‘‘யாருமே வசிக்காத இடத்துக்கு எதுக்கு சார் தனிமை ஷீட், ‘‘உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா ஆபிசர்ஸ்’’ என கேள்வி எழுப்புகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரானா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது. தொற்று பரவலை தடுக்க காஞ்சிபுரம் நகராட்சி சார்பில் வார்டுகள் தோறும் மருத்துவ முகாம்கள் மற்றும் நடமாடும் பரிசோதனை வாகனம் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் கலெக்டர் முகாம் அலுவலகம் எதிரே, நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பல்லவன் நகரில், கடந்த 3 ஆண்டுகளாக ஒரு வீடு பூட்டியே கிடக்கிறது. இந்த வீட்டில் உள்ளவர்களுக்கு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, நகராட்சி ஊழியர்கள் மெட்டல் ஷீட் தடுப்பு அமைத்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட வீட்டை சேர்ந்த குடும்பத்தினர் கடந்த 3 ஆண்டுகளாக வெளியூரில் வசிக்கின்றனர். யாருமே இல்லாத வீட்டுக்கு ஏன் தடுப்பு அமைக்கிறீர்கள் என நகராட்சி ஊழியர்களிடம் கூறியுள்ளனர். ஆனால், அதை அவர்கள் பொருட்படுத்தாமல், தடுப்புகளை வைத்து விட்டு சென்றுள்ளனர்.

அதேபோல், மேற்கண்ட வீட்டின் அருகில், யாரும் வசிக்காத வீட்டில், காய்ச்சல் குறித்து பரிசோதனை செய்ததாக, நகராட்சி தற்காலிக ஊழியர்கள் சுவரில் அடையாள குறியீடு செய்துவிட்டு சென்றுள்ளனர். பொதுமக்களுக்கு கொரோனா தீவிரம் குறித்து உபதேசிக்கும் அதிகாரிகள், ஆள் வசிக்காத வீட்டில் கொரோனா தடுப்பு வைத்துள்னர். யாரும் இல்லாத வீட்டில் வெப்பநிலை பரிசோதனை செய்ததாக ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். நடிகர் விவேக் நடித்த படத்தில், ‘‘ஆளே இல்லாத கடையில, யாருக்குடா டீ ஆத்துர…’’ என்ற வசனம் வரும். அதுபோலவே, 3 ஆண்டுகளாக யாரும் வசிக்காத வீட்டுக்கு, கொரோனா பாதிப்பு என கூறி, தடுப்புகள் அமைத்துள்ளது அதிகாரிகளின், போக்கு நிரூபிக்கிறது.

* தடுப்புகள் அமைக்க ரூ.8 ஆயிரம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த முதலில் சுமார் 5 கிமீ சுற்றளவுக்கு தடுப்புகள் அமைத்து 14 நாட்கள் தனிமைப்படுத்தினர். பின்னர், நோயாளி வசிக்கும் தெரு, அதன் பிறகு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் என நடைமுறை உள்ளது. காஞ்சிபுரம் பெருநகராட்சி சார்பில், தனிமைப்படுத்தப்படும் வீட்டிற்கு மெட்டல் ஷீட் அடிக்க 14 நாட்களுக்கு ரூ.8 ஆயிரம் ஒதுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் 14 நாட்களுக்கு பதிலாக 4 அல்லது 5 நாட்கள் மட்டும் கணக்கு காட்டிவிட்டு, அதே ஷீட்டை மற்றொரு வீட்டில், தடுப்புகள் அமைக்க எடுத்து செல்வதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா பரிசோதனை முடிவுகளை அறிவிப்பதிலும் நகராட்சி ஊழியர்கள் பொறுப்பில்லாமல் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Related Stories: