மூணாறு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீடு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 83 தமிழக தோட்ட தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். இதில் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இதுவரை 55 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். ஏழாவது நாளாக நேற்று நடந்த மீட்பு பணியில் எந்த உடலும் கண்டுபிடிக்கப்படவில்லை. மீட்பு பணி இன்றும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராய் விஜயன் ஆகியோர் நேற்று நிலச்சரிவு நடந்த இடத்தை பார்வையிட்டனர். பின்னர், மூணாறு அரசு விருந்தினர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

பின்னர் பினராய் விஜயன் அளித்த பேட்டியில், ‘‘நிலச்சரிவில் சிக்கிய அனைவருக்கும் வீடு கட்டி கொடுக்கப்படும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசால் செய்ய முடியக்கூடிய அனைத்து உதவிகளும் செய்யப்படும். காயமடைந்தவர்கள் சிகிச்சை செலவையும் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி செலவையும் அரசே ஏற்கும். மீட்பு பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. தேயிலை நிறுவனத்தினரும் தொழிலாளர்களுக்கு உதவிகள் வழங்க வேண்டும். இது தொடர்பாக தேயிலை தோட்ட நிறுவனத்தினரிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் குடியிருப்புகள் மோசமாக இருப்பதாக புகார்கள் வந்துள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

Related Stories: