உச்ச நீதிமன்றத்தில் 3 அமர்வில் மட்டும் நேரடி விசாரணை? ஓரிரு நாட்களில் அறிவிப்பு

புதுடில்லி: அடுத்த வாரம் முதல் உச்ச நீதிமன்றத்தில் மூன்று அமர்வுகளில் மட்டும் வழக்குகளை நேரடியாக நடத்துவது குறித்து, நீதிபதிகள் குழு பரிசீலித்து வருகிறது. கொரோனா வைரஸ் ஊரடங்கால், நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து  நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ளன. முக்கிய சில வழக்குகள் மட்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக விசாரிக்கப்படுகின்றன. இதனால், வழக்கறிஞர்களின் தொழில் பாதித்துள்ளது. எனவே, நீதிமன்றங்களில் நேரடி விசாரணையை தொடங்க வேண்டும் என அனைத்து மாநில உயர் நீதிமன்றங்கள், சிவில் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட இந்த கோரிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க, 7 நீதிபதிகள் கொண்ட குழுவை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமைத்தார். இந்த குழு நேற்று முன்தினம் கூடி விவாதித்தது. இதில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், இந்திய பார் கவுன்சில் தலைவர்கள், பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்களும் பங்கேற்றனர். அப்போது, ‘உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை நேரடியாக  விசாரிக்கும் நடைமுறையை விரைவில் கொண்டு வர வேண்டும். பல்வேறு முக்கிய வழக்குகள் கிடப்பில் உள்ளன,’ என சுட்டிக்காட்டப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் குழு, ‘அடுத்த வாரம் முதல் உச்ச நீதிமன்றத்தின் இரண்டு முதல், மூன்று நீதிமன்றங்களில் மட்டும் விசாரணைகளை நேரடியாக நடத்துவது குறித்து  பரிசீலிக்கப்படும்,’ என தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: