×

நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை பதில்

புதுடெல்லி: ‘செப்டம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்துவது என்பது சாத்தியமில்லை,’ என உச்ச நீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ‘நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள காரணத்தால், வரும் செப்டம்பர் மாதம் நடத்தப்பட உள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்,’ என உச்ச நீதிமன்றத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 11 மாணவர்கள் கடந்த 6ம் தேதி வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தங்கள் மனுவில், ‘கொரோனோ தொற்று நாளுக்கு நாள் நாடு முழுவதும் அதிகமாகி வரும் சூழலில், நீட் தேர்வை நடத்த திட்டமிட்டு இருப்பது சரியல்ல. மேலும், வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தினால் மாணவர்கள் அனைவரும் தேர்வில் கவனம் செலுத்த முடியாத நிலை கண்டிப்பாக ஏற்படும். அதனால், செப்டம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, வைரஸ் பரவல் முழுமையாக கட்டுக்குள் வந்த பிறகு நடத்த உத்தரவிட வேண்டும்.

அதேபோல், இது குறித்து கடந்த ஜூலை 3ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையையும் ரத்து செய்து, நீட், ஜேஇஇ தேர்வுக்காக மாவட்டத்திற்கு ஒன்று என கூடுதல் மையங்களை உருவாக்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. இதை கடந்த முறை விசாரித்த உச்ச நீதிமன்றம், இத்தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த முடியுமா? என்று கேள்வி எழுப்பி இருந்தது. இந்நிலையில், இத்தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை, உச்ச நீதிமன்றத்தில் நேற்று  தனது பதில் மனுவை தாக்கல் செய்தது. அதில், ‘நீட் தேர்வை ஆன்லைன் மூலம் கண்டிப்பாக நடத்த முடியாது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் அதிகப்படியான குளறுபடிகள் ஏற்படும். அதேபோல், கூடுதல் மையங்களை உருவாக்குவதும் சாத்தியமில்லை,’ என தெரிவித்துள்ளது.

Tags : Supreme Court , NEED EXAMINATION, ONLINE, NOT, SUPPORT, NATIONAL EXAMINATION AGENCY, ANSWER
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...