ஏழை விவசாயிகளுக்கான பிரதமர் கிசான் திட்டத்தில் ரூ.1000 கோடி முறைகேடு: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் நிறுத்திவைப்பு

சென்னை: ஏழை விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் திட்டத்தில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் விவசாயிகளுக்கு உதவிடும் வகையிலும், மழை மற்றும் வறட்சி காலத்தில் நிவாரணம் வழங்கும் வகையில் மத்திய அரசு, பிரதம மந்திரியின் கிசான் திட்டம் என்ற ஒரு திட்டத்தை பிரதமர் மோடி 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தார். அதன்படி, ஒவ்வொரு ஏழை விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வங்கி கணக்கில் 3 தவணையாக தலா ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வரவு வைக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் குறைந்த அளவே விவசாயிகள் பயன்பெறுவதால், அதிக விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. பிரதமர் கிசான் திட்டத்தில் தமிழகத்தில் மட்டும் 42 லட்சத்து 31 லட்சம் விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு 3 தவணையாக தலா ரூ.6 ஆயிரம் வங்கி மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு ரூ.3414.45 கோடியை ஐந்து தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி மானிய மாற்றம் மூலம் விடுவித்துள்ளது. இந்த நிலையில், மேலும் 25.89 லட்சம் விவசாயிகளுக்கு 6வது தவணையாக ரூ.517.82 நிதி வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரப்பட்டது.

குறிப்பாக கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிகளவு விவசாயிகள் இந்த திட்டத்தில் புதிதாக சேர்ந்திருப்பதாக புகார் வந்தது. இதுபற்றி இரண்டு மாவட்ட கலெக்டர்கள் விசாரணை நடத்தினர். பிரதமர் கிசான் திட்டத்தின் மாவட்ட வேளாண் துறை அதிகாரிகள் தங்கள் பகுதிகளில் உள்ள இ-சேவை மையத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, முறைகேடாக பல லட்சம் விவசாயிகளை இந்த திட்டத்தில் சேர்த்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. தமிழகத்தில் மட்டும் 14 மாவட்டங்களில், பல லட்சம் விவசாயிகளை இந்த திட்டத்தில் முறைகேடாக சேர்த்துவிட்டு வேளாண்மை துறை துணை மற்றும் உதவி இயக்குனர்கள் ரூ.1000 கோடிக்கும் மேல் சம்பாதித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது இந்த 14 மாவட்டங்களிலும் பிரதமர் கிசான் திட்ட உதவித்தொகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நேற்று வேளாண்மை துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, வேளாண் துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் முறைகேடு நடந்ததாக கூறப்படும் கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட சில மாவட்ட கலெக்டர்களை சென்னை, தலைமை செயலகம் வரவழைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கலெக்டர்கள் தங்கள் மாவட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்தும், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள், போலியாக சேர்க்கப்பட்ட விவசாயிகள் பட்டியலையும் அளித்துள்ளனர். அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கவும் வேளாண்மை துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: