ரசிகர்கள் இல்லாதது வசதிதான்

ஐபிஎல் போட்டி ரசிகர்கள் இல்லாமல் நடைபெற உள்ள நிலையில். அது வீரர்களின் உற்சாகத்தை குறைத்து விடும் என்பது பலரின் கருத்தாக தொடர்கிறது. இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக களம் காண உள்ள அறிமுக வீரர் லலித் யாதவ் (23) கருத்து வேறு மாதிரி இருக்கிறது. ‘என்னை பொறுத்தவரை ரசிகர்கள் இல்லாத அரங்கில் விளையாடுவது நல்லது. காரணம் எந்தவித அழுத்தமும் நமக்கு இருக்காது. இயல்பாக விளையாடலாம். அதுமட்டுமல்ல, ஆயிரக்கணக்கான ரசிகர்களிடையே இதுவரை விளையாடியதில்லை. உள்ளூர் போட்டிகளில், ஆளில்லாத அரங்குகளுக்கு முன்புதான் விளையாடி இருக்கிறேன். அதனால் இது பிரச்னையாக இருக்காது’ என்கிறார் லலித். டெல்லியை சேர்ந்த இவர் 2017 முதல் முதல் தர போட்டிகளில் விளையாடி வருகிறார். ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசும் சாதனையை 2 முறை நிகழ்த்தி பலரின் கவனத்தை ஈர்த்தவர். ஆல் ரவுண்டரான இவரை நடப்பு ஐபிஎல் தொடருக்கு, அடிப்படை விலையான 20 லட்ச ரூபாய்க்கு டெல்லி கேப்பிடல்ஸ் வாங்கியுள்ளது.

Related Stories: