குற்றவாளிகள் கொள்கைகளை உருவாக்குவது துரதிருஷ்டம் ரவுடிகளை அரசியலில் சேர்ப்பதா? சென்னை ஐகோர்ட் கடும் கண்டனம்: மத்திய அரசு சட்டம் இயற்றவும் வலியுறுத்தல்

சென்னை: அரசியலுக்குள் நுழைவதன் மூலம் குற்றவாளிகள், கொள்கைகளை உருவாக்குபவர்களாக மாறுவது துரதிருஷ்டவசமானது என்று கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் ரவுடிக் கும்பலை ஒழிக்க மகாராஷ்டிரா அரசு போல் ஏன் சட்டம் கொண்டு வரக்கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த ஜனா என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததை எதிர்த்து அவரது மனைவி ஜமுனா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஜனாவின் குற்றப்பின்னணி அரசியல் ஆவணங்களை படித்து பார்த்த நீதிபதிகள், 2009ம் ஆண்டு  பதிவு செய்யப்பட்ட கொலை உள்ளிட்ட வழக்குகள் எல்லாம் முதல் தகவல் அறிக்கை நிலையிலேயே உள்ளன. அந்த வழக்குகளின் புலன்விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. நீதிமன்ற விசாரணை தொடங்கவில்லை. 11 ஆண்டுகளாக போலீசார் என்ன செய்கிறார்கள் என கண்டனம் தெரிவித்தனர். அரசியல் பின்புலத்துடன் குற்றவாளிகள் பலர் புதுச்சேரியில் உலா வருகிறார்கள். இந்த குற்றப்பின்னணி அரசியலை ஒழிக்கவேண்டும்.

இந்த வழக்கில் 11 ஆண்டுகளாக புலன்விசாரணையை ஏன் முடிக்காமல் போலீசார் இழுத்து அடித்து வருகின்றனர் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று புதுச்சேரி போலீசுக்கு உத்தரவிட்டனர். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அரசியலுக்குள் நுழைவதன் மூலம் குற்றவாளிகள், கொள்கைகளை உருவாக்குபவர்களாக மாறுவது துரதிருஷ்டவசமானது. குற்றவாளிகளுக்கு கட்சியில் இடமளிப்பது, தேர்தலில் போட்டியிட அனுமதிப்பது போன்றவற்றை கட்சிகளின் தலைவர்கள் தவிர்த்தால் மட்டுமே, அரசியலை தூய்மைப்படுத்த முடியும்.

குற்றவாளிகள் அரசியலுக்குள் நுழைந்து, எம்பி, எம்எல்ஏக்கள் ஆகி அமைச்சராகவும் பதவி ஏற்பது, மக்களுக்கு தவறான தகவலை கொண்டு சேர்க்கும். குற்றவாளிகள், அரசின் கொள்கை முடிவுகளை எடுப்பவர்களாக இருப்பதை தடுக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். புதுச்சேரியில் எத்தனை ரவுடிக் கும்பல்கள் உள்ளன? குற்ற பின்னணியுடன் அரசியல் கட்சிகளில் உள்ளவர்கள் எத்தனை பேர்? ரவுடிக் கும்பல்கள் மீதான வழக்குகள் எத்தனை? அந்த வழக்குகளின் நிலை என்ன? சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளிக்க வற்புறுத்தப்படுகிறார்களா?

கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்? நாட்டு வெடிகுண்டுகளை போல, சட்டவிரோத ஆயுதங்கள் ஏதேனும் புதுச்சேரியில் பயன்படுத்தப்படுகின்றன, மகாராஷ்டிரா போல புதுச்சேரியில் ரவுடி கும்பலை ஒழிக்க தனிச்சட்டம் ஏன் கொண்டு வரக் கூடாது என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இந்த கேள்விகளுக்கு புதுச்சேரி அரசு 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். சமீபத்தில் சென்னை மாநகர போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி கல்வெட்டு ரவி, பாஜகவில் சேர்ந்தான். அவன் போலீஸ் குற்றப்பதிவேட்டில் ஏபிளஸ் ரவுடியாக உள்ளான். என்கவுண்டர் பயத்தில் அவன் கட்சியில் இணைந்ததாக கூறப்பட்டது.

இதற்கு சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பு நிலவியது. இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சாட்டையை சுழற்றியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: