ஊத்தங்கரை அருகே பாம்பாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்: கிராம மக்கள் வலியுறுத்தல்

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கானம்பட்டி அருகே பாம்பாற்றின் குறுக்கே நாப்பிராம்பட்டி செல்லும் வழியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண் டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், `கானம்பட்டி அருகே பாம்பாற்றின் குறுக்கே நாப்பிராம்பட்டி செல்லும் வழியில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.

இந்த பாலம் அமைப்பதன் மூலமாக கானம்பட்டி, சின்னதள்ளபாடி, பெரியதள்ளபாடி உட்பட பல்வேறு குக்கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறுவர். இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் ஊத்தங்கரை நகரத்திற்கு வர வேண்டும் என்றால் மாரம்பட்டி கிராமம், பாம்பாறு வழியாக  சுமார் 12 கிலோ மீட்டர் கடந்து தான் செல்ல முடியும். ஆனால் இப்பகுதியில் பாலம் அமைத்தால் 3 கிலோ மீட்டர் தூரத்தை விரைவாக கடந்து ஊத்தங்கரைக்கு சென்று விடலாம். சில நேரங்களில் அவசரமாக செல்லும் விவசாயிகள் பாம்பாற்றின் குறுக்கே நாப்பிராம்பட்டி வழியாக நடந்தே செல்கின்றனர்.

ஆனால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நின்றால் அவ்வழியாக கடந்து செல்வதில் சிரமம் ஏற்படும். இப்பகுதி மக்கள் பிரதான தொழிலாக விவசாயத்தை கொண்டுள்ளனர். இதனால் பாலம் அமைத்தால் விவசாய பொருட்களை ஊத்தங்கரை நகருக்கு கொண்டு செல்ல வசதியாக இருக்கும். எனவே, பாம்பாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க கிருஷ்ணகிரி  மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்` என்றனர்.

Related Stories: