×

காரைக்குடி நகராட்சியில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

காரைக்குடி: காரைக்குடி நகராட்சி பகுதிகளில் ஆங்காங்கே தெருக்களில் தேங்கி கிடக்கும் குப்பையால் நோய் பரவும் அபயாம் உள்ளது. காரைக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. நகராட்சியை பொறுத்தவரை மக்களின் தேவை, வளர்ச்சிக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகள் போதுமான அளவில் இல்லை. பாதிக்கு மேற்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்களே இல்லாத அவலநிலை உள்ளது. பல்வேறு இடங்களில் சாலைகளில்தான் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. நகராட்சி பகுதிகளில் தினமும் 48 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்பட்டு, தேவகோட்டை ரஸ்தா பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.

வீடுகளில் தினமும் குப்பை வாங்க 170க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். இதுதவிர தனியார் நிறுவனம் சார்பில் 120க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களை கொண்டு சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. துப்புரவு பணி 9 டிவிசனாக பிரித்து மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பை ஒரு இடத்தில் குவித்து வைக்கப்பட்டு பின் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படும். இவ்வாறு குவித்து வைக்கப்படும் குப்பைகள் முறையாக அள்ளப்படுவதில்லை. நீண்ட நாட்களாக கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

ஒருசில வார்டுகளில் குப்பை வாங்க முறையாக பணியாளர்கள் வராததால் மக்கள் ஆங்காங்கே குப்பைகளை கொட்டி விட்டு செல்கின்றனர். தேங்கி கிடக்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் உள்ளது. குப்பைகளை அகற்ற நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : municipality ,Karaikudi , Karaikudi Municipality, garbage, disease risk
× RELATED புகழூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு இல்லை