குற்றாலம் மலையில் யானை தாக்கி உயிரிழந்த வேட்டை தடுப்பு காவலர் உடல் மீட்பு: உருக்கமான தகவல்கள்

தென்காசி: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு தென்காசி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக ஐந்தருவி வெண்ணமடை குளம் பகுதி, கரடி அருவி பகுதி, குண்டர் தோப்பு பகுதி, தெற்குமலை எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில் 30 வயது மேக்னா யானை ஒன்று சுற்றித்திரிந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் மீண்டும் குண்டர் தோப்பு பகுதியில் யானை புகுந்து அங்குள்ள வேலிகளை சேதப்படுத்தியது.

தகவலறிந்த குற்றாலம் வனச்சரகர் பாலகிருஷ்ணன் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் வனப்பகுதிக்குள் சென்று ஒலி எழுப்பியும், வெடி வெடித்தும்  யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது வெடி சத்தம் கேட்டு யானை வனப்பகுதிக்குள் செல்வதற்கு பதிலாக வனக்காவலர்களை நோக்கி திரும்பி வேகமாக ஓடி வந்தது. அப்போது வேட்டை தடுப்பு காவலரான மேலகரத்தை அடுத்த நன்னகரம் பகுதியை சேர்ந்த முத்துராஜ் (58) என்பவரை யானை தாக்கியதில் உயிரிழந்தார். அவரது உடல் அருகிலேயே யானை நின்று இருந்ததால் உடலை மீட்பதில் இடையூறு ஏற்பட்டது.

இதையடுத்து வனச்சரகர் பாலகிருஷ்ணன் தலைமையில்  வனவர் பாண்டியராஜன் உள்ளிட்ட வனத்துறையினர் 35 பேர், உறவினர்கள் 15 பேர், தென்காசி தாசில்தார் சுப்பையன், தலையாரி, உளவுத்துறை ஏட்டு விக்னேஷ்வரன் உள்ளிட்ட 60 பேர் கொண்ட  கொண்ட குழுவினர் உடலை மீட்கும் பணியில்  நேற்றிரவு முதல் விடிய விடிய ஈடுபட்டனர். கூட்டம் காரணமாக பலியானவரின் உடலை யானை, சேதப்படுத்தாமல் இருக்க மிக கவனமுடன் செயல்பட்டனர். தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணி அளவில் சம்பவ இடத்தில் இருந்து யானை நகர்ந்து சென்றது. இதனைத்தொடர்ந்து முத்துராஜ் உடலை, வனத்துறையினர் மீட்டு இன்று காலை 9 மணிக்கு மலைப்பகுதிக்கு கொண்டு வந்தனர்.

தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேட்டை தடுப்பு காவலர் முத்துராஜ், யானையிடம் சிக்கி பலியானது எப்படி என்பது குறித்து உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன. வேட்டை தடுப்பு காவலர் முத்துராஜ் உள்ளிட்ட வனத்துறையினர் நேற்று, காட்டில் சுற்றித்தரிந்த மேக் னா யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். அப்போது யானை முன்னோக்கி சென்று வனத்துறையினரை விரட்டியது. யானை முகாமிட்டு இருந்த மெயின்பாதை வழியாக வனத்துறையினர் தப்பி முயன்றனர். அப்போது அதன் அருகில் உள்ள ஒத்தையடி பாதை வழியாக வேட்டை தடுப்பு காவலர் முத்துராஜ் தப்ப முயன்றார்.

வனத்துறையினரை யானை விரட்டி சென்று திரும்பி வரும்போது ஒத்தையடி பாதையில் சிக்கிய முத்துராஜை விரட்டிச் சென்றுள்ளது. ஒத்தையடி பாதையில் தொடர்ந்து ஓடுவதற்கு இடம் இல்லை. பாறை காணப்பட்டது. இதனால் யானையிடம் சிக்கிய முத்துராஜை, தும்பிக்கையால் தாக்கி தரையில் போட்டு தலை, வயிறு, நெஞ்சு பகுதியில் காலால் மிதித்து கொன்றுள்ளது தெரியவந்தது. நேற்று (ஆக.12) யானைகள் தினம் கடைபிடிக்கப்பட்டது. யானைகள் தினத்தில் வேட்டை தடுப்பு காவலர், யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: