×

காவிரி டெல்டாவில் எரிவாயு குழாய்ப் பாதை; விவசாயிகளுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் : ராமதாஸ் கண்டனம்

சென்னை : காவிரி டெல்டாவில் எரிவாயு குழாய்ப் பாதை அமைக்கும் பணிகளை கைவிட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஆக.13) வெளியிட்ட அறிக்கை:

காவிரி பாசனப்பகுதியில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை கெயில் நிறுவனம் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி மேற்கொண்டு வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் விவசாயத்தை அழிக்கும் நோக்குடன் கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய்ப் பாதை அமைப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பழையபாளையம் என்ற இடத்தில் மாதானம் திட்டம் என்ற பெயரில் 7 ஆண்டுகளுக்கு முன் அதிக எண்ணிக்கையில் எண்ணெய்க் கிணறுகளை ஓஎன்ஜிசி நிறுவனம் அமைத்தது. அங்கு கச்சா எண்ணெயும், எரிவாயும் அதிக அளவில் எடுக்கப்படுகின்றன. அங்கு எடுக்கப்படும் எரிவாயுவைக் கொண்டு செல்வதற்காக மாதானம் முதல் மேமாத்தூர் வரை 29 கி.மீ. தூரத்துக்கு கெயில் நிறுவனம் சார்பில் குழாய் பதிக்கும் பணிகள் கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டன. அதற்கு பாமக கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தது. விவசாய அமைப்புகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் எரிவாயு குழாய்ப் பாதை அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

ஓராண்டுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குழாய்ப் பாதை அமைக்கும் பணிகளை கெயில் நிறுவனம் இப்போது மீண்டும் தொடங்கியிருக்கிறது. ஏற்கெனவே திட்டமிடப்பட்ட பாதையில் அமைக்காமல், சீர்காழி அருகே உள்ள திருநகரியில் இருந்து உச்சிமேடு, வெள்ளக்குளம், கேவரோடை, இருவக்கொல்லை ஆகிய கிராமங்களின் வழியாக முதன்மை எரிவாயு சேமிப்பு மையத்திற்கு புதிய வழித்தடத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை மீண்டும் கெயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

அதுமட்டுமின்றி, கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமத்திலும் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கரோனா காலத்தில் விவசாயிகள் வெளியில் வந்து போராட்டம் நடத்த முடியாது என்ற எண்ணத்தில் கெயில் நிறுவனம் தொடந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. விவசாயத்தைக் கடுமையாகப் பாதிக்கும் இத்திட்டத்தை அரசு அனுமதிக்கக்கூடாது.

மாதானம் பகுதியில் 7 ஆண்டுகளுக்கு முன் எண்ணெய்க் கிணறுகள் தோண்டப்பட்ட போது விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது, அந்தப் பகுதியில் கூடுதலாக எண்ணெய், எரிவாயுக் கிணறுகள் தோண்டப்படாது; கச்சா எண்ணெயும், எரிவாயுவும் சரக்குந்து மூலமாக மட்டுமே கொண்டு செல்லப்படும்; அதற்காக குழாய்ப் பாதை அமைக்கப்படாது என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

ஆனால், பின்னர் அந்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு, இருவக்கொல்லை, தாண்டவன்குளம் உள்ளிட்ட கிராமங்களில் கூடுதலாக 7 எண்ணெய்க் கிணறுகளை ஓஎன்ஜிசி அமைத்தது. அடுத்தகட்டமாக குழாய்ப் பாதை அமைக்கும் பணிகளையும் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி ஓஎன்ஜிசி நிறுவனமும், கெயில் நிறுவனமும் மேற்கொண்டு வருகின்றன. இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகமாகும்.

மாதானம் முதல் மேமாத்தூர் வரை கெயில் குழாய்ப் பாதை அமைப்பதால் அப்பாதை நெடுகிலும் உள்ள 30 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான விளைநிலங்கள் பாதிக்கப்படும். இதனால் பல்லாயிரம் விவசாயிகள் வாழ்வாதாரங்களை இழப்பார்கள். விவசாயிகளின் வாழ்வாதாரங்களைப் பறித்துவிட்டு, எண்ணெய் குழாய்ப் பாதைகளை அமைப்பது கண்களை விற்று சித்திரம் வாங்குவதற்கு இணையான அழிவுச் செயலாகும்.

மாதானம் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகள் அமைக்கப்படும்போதே, அதற்கு அங்குள்ள விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது குழாய்ப் பாதைகள் அமைக்கப்படாது என்று ஓஎன்ஜிசி மற்றும் கெயில் நிறுவனங்கள் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் பாமக முன்னெடுத்த தொடர் இயக்கங்கள் காரணமாக காவிரி பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இவ்வளவுக்குப் பிறகும் விவசாயத்தை அழித்து எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்ப் பாதை அமைப்பது எந்த வகையிலும் அறம் அல்ல... நியாயமும் அல்ல.

இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தொழிற்திட்டங்களும், எரிபொருள் திட்டங்களும் தேவைதான். ஆனால், அவை விவசாயத்தை அழிப்பதாக இருந்து விடக்கூடாது. விவசாயத்தை அழித்து குழாய்ப்பாதை அமைப்பது காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதன் நோக்கத்தையே அர்த்தமற்றதாக்கி விடும். எனவே, மாதானம் முதல் மேமாத்தூர் வரை எரிவாயு குழாய்ப் பாதை அமைக்கும் திட்டத்தை ஓஎன்ஜிசி மற்றும் கெயில் நிறுவனங்கள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Tags : Cauvery Delta , Gas pipeline in the Cauvery Delta; The biggest betrayal of trust to farmers: Condemnation of Ramadan
× RELATED தஞ்சாவூர் ரயில் நிலையத்தில்...