கல்லிலேயே கலை வண்ணம் காட்டும் புதுச்சேரி கலைஞர்கள்...!! பல்லுயிர் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் தொண்டு நிறுவனம்!

புதுச்சேரி:  பல்லுயிர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வன உயிரினங்களை பாதுகாக்கவும் புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் பாம்பு, உடும்பு, பச்சோந்தி என பலவகையான உயிரினங்களின் உருவ படங்களை மிக தத்ரூபமாக வரைந்து வருகின்றன. அதாவது கடப்பா கற்கள், சிமெண்ட் ஆகியவற்றை கொண்டு வன விலங்குகள், பறவைகள், ஊர்வனவற்றின் உருவங்கள் என அனைத்தும் மிக அழகான முறையில் உருவாக்கப்பட்டு காண்போர் கண்களுக்கு விருந்து படைக்கின்றன.

அதிலும் சிலை கற்கள் மட்டுமின்றி வன விலங்குகளின் ஓவியங்களை பாறைக்கற்களிலும் தீட்டி வருகின்றன. மேலும் ஒவ்வொரு உயிரினமும் எந்த வண்ண கலவையில் இருக்குமோ, அதே நிறங்களில் ஓவியங்களை தீட்டி உருவங்களுக்கு உயிர் கொடுக்கின்றனர் தொண்டு நிறுவனத்தில் உள்ள கலைஞர்கள். இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு உயிரினத்தின் உடற்கூறுகளும் 100 சதவீதம் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக புகைப்பட கலைஞர்கள் வன பகுதிகளுக்குள் சென்று அவற்றை புகைப்படம் எடுத்து வருகின்றனர். அதனை மாதிரியாக கொண்டு, இந்த படைப்புகள் உயிர் பெறுகின்றன.

அதாவது புதுச்சேரியில் இருக்கும் அலையாத்தி காடுகளுக்கு வரும் வெளிநாட்டு பறவைகளை படம்பிடிக்க புகைப்பட கலைஞர் மற்றும் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் ரூபேஷ் குப்தா ஆகிய இருவரும் சென்று வருகின்றனர். இதனையடுத்து இந்த தொண்டு நிறுவனத்தில் உருவாகும் சிலைகள், சிற்பங்கள், ஓவியங்கள் என அனைத்தும் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள சரணாலயங்கள், அருங்காட்சியங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் காட்சிப்படுத்தப்படுகின்றன.

மேலும் முருங்கப்பாக்கத்தில் இருக்கும் அருங்காட்சியங்களிலும் பார்வையாளர்களுக்காக ஓவியங்கள், சிலைகள் வைக்கப்படுகின்றன. இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியவை,  நாட்டில் வசிப்பவர்கள் மட்டுமே உயிர்கள் அல்ல , காட்டுக்குள்ளும் நீருக்குள்ளும் வாழ்பவையும் உயிரினங்களே என்பதுதான். இந்த புரிதல், பல்லுயிர் பெருக்கத்தின் அவசியத்தை உணர்த்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

Related Stories: