சித்தா,யுனானி, ஆயுர்வேதா உள்ளிட்ட மருத்துவ ஆராய்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டு வாரியாக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது ? : மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!!

சென்னை : சித்தா,யுனானி, ஆயுர்வேதா உள்ளிட்ட மருத்துவ ஆராய்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டு வாரியாக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பது குறித்து மத்திய அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பியதாக சித்த மருத்துவர் தணிகாசலம் தற்போது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனது மகன்  தணிகாசலம் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து தணிகாச்சலத்தின் தந்தை கலியபெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த ஆட்கொணர்வு மனு, நீதிபதிகள் கிருபாகரன், வி.எம் வேலுமணி அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது,சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகள் புறக்கணிக்கப்படுவதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் சித்த மருத்துவத்தை மேம்படுத்தும் விதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது. இதற்கு பதில் அளித்த மத்திய ஆயுஷ் அமைச்சகம், கடந்த 10 ஆண்டுகளில் ரூ.239 கோடி சித்த மருத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், சித்த மருத்துவத்திற்கான ஆராய்ச்சிக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து நீதிபதிகள்

ஒவ்வொரு ஆண்டும் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள சித்தா, யுனானி, ஆயுர்வேதா உள்ளிட்ட ஒவ்வொரு துறைகளிலும் தனிப்பட்ட முறையில் மருத்துவ ஆராய்ச்சிக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பினர். அத்துடன், கடந்த 10 ஆண்டுகளில் சித்தா, யுனானி ஆயுர்வேதா உள்ளிட்ட மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு ஆண்டு வாரியாக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பது குறித்து மத்திய அரசு ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்

Related Stories: