திருச்சியில் 2 வாரங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்த கோரிய வழக்கு.: மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: திருச்சியில் 2 வாரங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்த கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா வேகம் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் வழக்கறிஞர் ராஜகோபால் என்பவர் திருச்சியில் கொரோனா வேகம் அதிகரித்து வருவதால்  2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுகுறித்த அவர் தாக்கல் செய்த மனுவில், திருச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது, இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் தொற்று பாதித்துள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது.

எனவே, சமூக பரவலை தடுக்க உடனடியாக இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இந்திய மருத்துவக் கழகத்தின் திருச்சி கிளை பரிந்துரைப்படி திருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று, அவர் மனுவில் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் இந்த வழக்கானது நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருச்சியில் கொரோனா நோயை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும், திருச்சி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் காணொலி மூலம் ஆஜராகி விளக்கம் தர உத்தரவிட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 27ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: