தங்க நகைகளை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!: 10 சவரன் நகையை மீட்டு போலீசார் விசாரணை..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தங்க நகைகளை இரட்டிப்பாக்கி கொடுப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கோசுகுறிச்சி கரையூரை சேர்ந்த மலைசாமியிடம் திருச்சி மாவட்டம் மலம்பட்டியைச் சேர்ந்த குமரேசன் என்பவர் தன்னிடம் தங்க நகைகளை கொடுத்தால் இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பி மலைச்சாமி தன்னிடம் இருந்த சுமார் 10 சவரன் நகையை குமரேசனிடம் கொடுத்துள்ளார்.

இதை தொடர்ந்து, அந்த நகையை மலைசாமியின் தோட்டத்திலேயே குமரேசன் புதைத்ததாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அந்த இடத்தை தோண்டி பார்த்தால் 20 சவரன் நகை இருக்கும் என்று கூறிவிட்டு குமரேசன் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து, அந்த இடத்தை தோண்டி பார்க்கும் போது நகை இல்லாததால் அதிர்ச்சி அடைந்த மலைச்சாமி, தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்து உடனடியாக நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, சப் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் குமரேசனை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குமரேசனிடம் இருந்த 10 சவரன் நகையையும் போலீசார் பறிமுதல் செய்தனர். உழைக்காமல் எந்த பொருளும் இரட்டிப்பாகாது என்பதை மக்கள் உணர்ந்தாள் மட்டுமே இதுபோன்ற மோசடிகளில் இருந்து தப்ப முடியும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories:

>