குற்றாலம் மலையில் வேட்டை தடுப்பு காவலரை யானை மிதித்து கொன்றது

தென்காசி: குற்றாலம் மலையில் சுற்றித்திரியும் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்ற போது யானை மிதித்து வேட்டை தடுப்பு காவலர் பலியானார்.  கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு தென்காசி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் படையெடுப்பு அதிகரித்துள்ளது. அருவிகளில் பாம்புகள், காட்டுப்பன்றி உள்ளிட்டவை தண்ணீரில் அடித்து வரப்பட்டன. ஐந்தருவியில் விழுந்த காட்டுப்பன்றி உயிரிழந்தது. மேலும் குரங்குகளும் அதிகளவில் ஊருக்குள் படையெடுத்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஐந்தருவி வெண்ணமடை குளம் பகுதி, கரடி அருவி பகுதி, குண்டர் தோப்பு பகுதி, தெற்குமலை எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில் ஆண் யானை ஒன்று சுற்றித் திரிவதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.

ஒரு சிலர் அதனை புகைப்படமும் எடுத்துள்ளனர். இதுகுறித்து நேற்று தினகரனிலும் படத்துடன் செய்தி வெளியானது.  நேற்று மதியம் மீண்டும் குண்டர் தோப்பு பகுதியில் யானை புகுந்து அங்குள்ள வேலிகளை சேதப்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்த குற்றாலம் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் சகிதம் வனப்பகுதிக்குள் சென்று யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒலி எழுப்பியும், வெடி வெடித்தும் யானையை விரட்டும் பணியை மேற்கொண்டனர்.அப்போது வெடி சத்தம் கேட்டு யானை வனப்பகுதிக்குள் செல்வதற்கு பதிலாக வனக்காவலர்களை நோக்கி திரும்பி வேகமாக ஓடி வந்தது. இதனால் வனத்துறையினர் பின்வாங்கி ஓடி வந்தனர். சற்று தூரம் வரை விரட்டிய யானை பின்னர் நின்று விட்டது.

இதையடுத்து வனத்துறையினர் மீண்டும் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சித்தபோது வேட்டை தடுப்பு காவலரான மேலகரத்தை அடுத்த நன்னகரம் பகுதியை சேர்ந்த முத்துராஜ் (58) என்பவர் மாயமானார். அவரை தேடியபோது யானை மிதித்துக் கொன்றது தெரியவந்தது. அவரது உடலை மீட்க முடியாதவாறு யானை அருகிலேயே நின்று கொண்டிருந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். எவ்வளவோ முயற்சி செய்தும் யானை அந்த இடத்தை விட்டு நகரவில்லை. அதற்குள் இருட்டியதால் நெருப்பு மூட்டி யானையை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் இரவிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் துப்பாக்கி, மயக்க ஊசி உள்ளிட்டவற்றையும் வனத்துறையினர் தயாராக எடுத்து வந்தனர்.

நேற்று யானைகள் தினம் என்பதால் யானைக்கு காயம் எதுவும் ஏற்படுத்த வேண்டாம் என்று வனத்துறை மேலிடம் வாய்மொழியாக அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் வனத்துறையினர் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் குற்றாலம் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதால் வனவிலங்குகள் சர்வசாதாரணமாக மலையடிவாரப் பகுதிகளில் நடமாடி வருவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: