நெல்லை சுற்றுவட்டாரங்களில் இரட்டை ரயில்பாதை பணிகள் தீவிரம்

நெல்லை: நெல்லை சுற்றுவட்டாரங்களில் இரட்டை ரயில்பாதை அமைக்கும் பணி தீவிரமடைந்து வரும் நிலையில், மீனாட்சிபுரம் தாமிரபரணி ஆற்றில் புதிய ரயில்பாலம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. தெற்கு ரயில்வேக்கு வருமானத்தை அள்ளித் தரும் வழித்தடமாக கன்னியாகுமரி - சென்னை வழித்தடம் உள்ளது. இவ்வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து 100 சதவீதம் உள்ளது. இரவு நேரங்களில் தென்மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், செந்தூர், அனந்தபுரி என வரிசையாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்னை நோக்கி பயணிக்கின்றன. சென்னை முதல் செங்கல்பட்டு, திண்டுக்கல் முதல் மதுரை வரை மட்டுமே இந்த வழித்தடத்தில் இருவழிப்பாதைகள் உள்ளன. இதர பகுதிகளில் ஒருவழிப்பாதை மட்டுமே உள்ளது. இதனால் போக்குவரத்து நெருக்கடி அதிகம் காணப்படுகிறது.

எனவே தென்மாவட்டங்களில் இரட்டை ரயில்பாதை அமைக்கும் பணிகள் கடந்த ஓராண்டாக தீவிரமாக நடந்து வந்தன.  இரட்டை ரயில்பாதை பணிகள் மதுரை-மணியாச்சி-நாகர்கோவில், மணியாச்சி-தூத்துக்குடி, கன்னியாகுமரி-திருவனந்தபுரம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தது.  இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பணிகள் மந்தமடைந்தன. வடமாநில தொழிலாளர்கள் இரட்டை ரயில்பாதை பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், அவர்கள் ஊரடங்கால் சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர். அதனால் பணிகள் சிற்சில இடங்களில் தேங்கி கிடந்தன. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் மும்முரமாக பணிகளை நடத்த தெற்கு ரயில்வே உத்தரவிட்டது.

அதன்பேரில் ரூ.1700 கோடி செலவில் மதுரை-நாகர்கோவில் வரை இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.

நெல்லை-நாகர்கோவில் இடையேயான 74 கி.மீ. தொலைவு ரயில்பாதையில் தண்டவாளத்தின் அளவு,  காலியாக உள்ள ரயில்வே இடங்கள், தண்டவாள வரைபடம் ஆகியவற்றை அதிநவீன கருவிகள் மூலம் கணக்கெடுத்து ஏற்கனவே வைத்திருந்தனர். தற்போது அந்த வழித்தடத்தில் பணிகள் மும்முரம் அடைந்துள்ளன. நெல்லை தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மீனாட்சிபுரம் பகுதியில் ஏற்கனவே புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது.  கொரோனா பாதிப்பால் தடைப்பட்டு இருந்த பணிகள் தற்போது சூடு பிடித்துள்ளது. குருந்துடையார்புரம் முதல் மீனாட்சிபுரம் வரை ஏற்கெனவே உள்ள ரயில்வே பாலத்தை விரிவாக்கம் செய்ய இயலாத நிலையில் புதிய பாலம் அங்கு தனியாக அமைக்கப்பட்டு வருகிறது.

மொத்தம் 266 மீட்டர் நீளத்திலும் 6.3 மீட்டர் அகலத்திலும் பாலம் அமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக தூண்கள் அமைக்கும் பணி கடந்த மார்ச் மாதம் நடந்தது. தற்போது அங்கு மொத்தம் 30 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.  அவற்றின் மீது இரும்பு தண்டவாளங்களை பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது. இன்னும் இரு வாரங்களில் அப்பணிகள் நிறைவுற உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. வழக்கமாக நீண்ட இரும்பு தூண்கள் கொண்டு பாலங்கள் அமைக்கப்படும். ஆனால், இந்தப் புதிய தாமிரபரணி ஆற்று பாலம் கான்கிரீட் முறையில் கூடுதல் எடை தாங்குவதோடு, இயற்கை பேரிடர் காலங்களில் எளிதில் சேதமடையாமல் பாதுகாக்கும் ஆற்றல் கொண்டது. சுமார் 500 டன் எடையைத் தாங்கும் வகையில் உறுதியுடன் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே உள்ள ரயில்வே பாலத்தில் நடைபாதை கிடையாது. இதனால் பணியாளர்கள் பராமரிப்புப் பணிகளைச் செய்வது கடினம். ஆனால், புதிய பாலத்தில் தண்டவாளத்தின் அருகே நடைபாதைக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில்வே ஊழியர்களுக்கு பொருள்களை எடுத்துச் செல்ல கூடுதல் வசதியாக இருக்கும்.

Related Stories: