×

கொடைக்கானலில் 153 ஆண்டுகளாக நடந்த சலேத் அன்னை திருவிழா ரத்து

கொடைக்கானல்:  கொடைக்கானலில் 153 ஆண்டுகளாக நடந்து வந்த சலேத் அன்னை ஆலய திருவிழா கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மிகவும் பழமையான புனித சலேத் அன்னை ஆலயம் உள்ளது. பிரான்ஸ் நாட்டில் சலேத் அன்னை ஆலயம் உள்ளது. அதற்கடுத்தபடியாக, கொடைக்கானலில் தான் சலேத் அன்னைக்கு ஆலயம் உள்ளது. 180 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த ஆலயத்தில், ஆண்டுதோறும் ஆக. 14 மற்றும் 15ம் தேதிகளில் திருவிழா நடைபெறும். ஆகஸ்ட்  முதல் வாரத்தில் கொடியேற்று விழா நடைபெறும்.

ஆக. 14ம் தேதி மாலை  அன்னையின் திருத்தேர் பவனியும், ஆக. 15ம் தேதி சப்பர பவனியும்  நடைபெறும். இரண்டு நாட்களும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளிநாடுகளில்  இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும், மாநிலம் முழுவதும் இருந்தும் சலேத் அன்னை ஆலயத்திற்கு வருவார்கள். கடந்த  153 ஆண்டுகளாக இந்த திருவிழா நடைபெற்று வந்தது. தற்போது முதல் முறையாக இந்தத் திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு தடை உத்தரவால் இந்த ஆண்டு நடைபெற உள்ள 154வது ஆண்டு திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொடைக்கானல் திருஇருதய ஆலய பங்குத்தந்தையும், வட்டார அதிபருமான அருட்தந்தை எட்வின் சகாயராஜ் கூறுகையில், 154வது ஆண்டு சலேத் அன்னை திருவிழா அரசு உத்தரவால் தற்போது நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆக. 14, 15 தேதிகளில் பங்கு தந்தையர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு திருப்பலி பூஜைகள் மட்டும் நடைபெறும். இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள முடியாது. அவர்கள்  வீடுகளிலிருந்து காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்று அபாயம் நீங்கியவுடன் அன்னையின் திருவிழா சிறப்பாக நடத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டு உள்ளது’’ என்றார்.


Tags : festival ,Saleh Anna ,Kodaikanal , Kodaikanal, Saleth Annai Festival
× RELATED ஊட்டச்சத்து மாத விழா