விநாயகர் சதுர்த்தி விழா களை கட்டாததால் வட மாநிலங்களுக்கு தேங்காய் லோடு அனுப்புவது கடும் சரிவு

சேலம்: தமிழகத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், தாராபுரம், உடுமலைப்பேட்டை, கோவை உள்பட பல்வேறு பகுதிகளில், தென்னை மரங்கள் அதிகளவில் உள்ளன. இந்த பகுதிகளில் பறிக்கப்படும் தேங்காய், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும், குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரபிரசேதம் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு தேங்காய் லோடு சரிவர செல்லாமல் இருந்தது. விநாயகர் சதுர்த்தியையொட்டி, வட மாநிலங்களுக்கு தமிழகத்தில் இருந்து அதிகளவில் லோடு அனுப்பப்படும்.

நடப்பாண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, வட மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழா இன்னும் களை கட்டாமல் உள்ளது. அதனால், தேங்காய் லோடு செல்லாமல் தேக்கமடைந்துள்ளது. இது குறித்து சேலம் குப்பனூரை சேர்ந்த தேங்காய் விவசாயிகள் கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சேலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு 100 லோடு தேங்காய் அனுப்பப்படும். நடப்பாண்டு கொரோனா காரணமாக, வட மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழா இன்னும் சுறுசுறுப்படையவில்லை. இதனால் வழக்கமாக அனுப்பப்படும் தேங்காய் லோடு தடைபட்டுள்ளது.

மேலும், கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், அங்குள்ள மார்க்கெட்டுகள்  சரிவர செயல்படாமல் உள்ளது.  தற்போது, சேலத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு ஒரு லோடு மட்டுமே அனுப்பப்படுகிறது. வட மாநிலங்களுக்கு சரிவர லோடு செல்லாததால், குப்பனூர் பகுதிகளில் அதிகளவில் தேங்காய் தேக்கமடைந்துள்ளது. ஒரு தேங்காய் 13 முதல் 15 வரை விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Related Stories: