திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கரையான்களால் சேதமடைந்த மரச்சிற்பங்கள் சீரமைக்கும் பணி தொடக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பராமரிப்பின்றி பாழான மரச்சிற்பங்கள் மீண்டும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பட்டுப்போன 62 மரங்களை அகற்றாமல், அதில் கலை நுட்பத்துடன் கூடிய அழகிய மரச்சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மயில், முதலை, குதிரை, பட்டாம்பூச்சி, பறவை போன்ற பல்வேறு விதமான சிற்பங்கள் மரத்தில் செதுக்கியதால், கிரிவலப்பாதையில் செல்வோர் வியப்புடன் அதனை கண்டு ரசித்தனர். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட பிறகு கிரிவலப்பாதையில் மக்கள் நடமாட்டம் முடங்கியது. மேலும், கிரிவல பாதையில் மரங்களில் செதுக்கப்பட்ட சிற்பங்களும் பராமரிப்பின்றி பாழானது.

பெரும்பாலான மரங்களில் கரையான்களால் சிற்பங்கள் சேதமடைந்தன. எனவே, இவற்றை பராமரித்து பாதுகாக்க வேண்டும் என தினகரன் நாளிதழில் கடந்த மாதம் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, மரச்சிற்ப கலைஞர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர், கிரிவலப்பாதையில் உள்ள மரச்சிற்பங்களை சீரமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர். மேலும், கரையான்கள் சேதப்படுத்துவதை தடுக்கும் ரசாயன கலவைகளை பயன்படுத்தி, சிற்பங்களை மேலும் அழகுப்படுத்தினர். தொடர்ந்து, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இவற்றை பராமரிப்பதன் மூலம், அதன் அழகு குறையாமல் நீண்ட காலம் பாதுகாக்க முடியும் என சிற்பிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Related Stories: