முதலைமச்சர் வேட்பாளர் குறித்து உரிய காலத்தில் அதிமுக தலைமை முறையாக அறிவிக்கும்: ஆலோசனைக்கு பின் கே.பி.முனுசாமி பேட்டி

சென்னை: முதலைமச்சர் வேட்பாளர் குறித்து உரிய காலத்தில் அதிமுக தலைமை முறையாக அறிவிக்கும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் பணியைப் பற்றி ஆலோசிக்க இன்றைய கூட்டம் கூட்டப்பட்டது. முதல்வர் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். அவருக்குத் துணையாக துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளார். அமைச்சர்கள் செயல்படுகின்றனர். இன்று கொரோனா பேரிடர் சூழ்ந்த இக்கட்டான நிலையில் தமிழகம் முன் மாதிரி மாநிலமாகச் செயல்படுகிறது.

முதல்வர் தலைமையில் இந்தியாவிற்கே முன் மாதிரியாக தொற்றுத் தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. அது ஆட்சிப்பணி. கட்சிப் பணி குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம். முதல்வர் வேட்பாளர் யார் என நீங்கள் கேட்ட கேள்விக்கு உரிய காலத்தில் உரிய முடிவை உரிய முறையில் எடுப்போம். அதைக் கட்சி தலைமை நிர்வாகிகள் அறிவிப்பார்கள். பாஜக தலைமையில்தான் கூட்டணி என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் சொன்னாரா? தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா சொன்னாரா? நேற்றுவரை ஒரு கட்சியில் இருந்த வி.பி.துரைசாமி, அதற்கு முன் இன்னொரு கட்சியில் இருந்தவர் ஏதோ ஒரு ஆதாயம் கிடைக்கும் என்பதற்காக பாஜகவுக்குச் சென்றுள்ளார்.

அவர் சொல்வதெல்லாம் கருத்தா? அப்படி கருத்துச் சொல்ல அவருக்கு அந்தக் கட்சி அதிகாரம் கொடுத்துள்ளதா? நேற்று முன் தினம் பேட்டி அளித்த பாஜக மாநிலத் தலைவர் முருகன், அதிமுகவுடன் கூட்டணி அமைந்துள்ளது என்கிறார். பிறகு அந்தக் கேள்விக்கே இடமில்லை. அந்தக் கூட்டணி யார் தலைமையில் அமைந்தது. அதிமுக தலைமையில் தானே. அப்படிப்பட்ட கூட்டணிக்கு முருகனே ஒப்புதல் கொடுத்துள்ளார். பாஜக, அதிமுக கூட்டணியில் இருக்கிறதா என்கிற கேள்வியே முறையற்ற ஒன்று. அதிமுக கூட்டணியில்தான் பாஜக உள்ளது என அதன் மாநிலத் தலைவர் முருகன் கூறியிருப்பதை உங்களுக்குப் பதிலாகச் சொல்கிறேன், என கூறியுள்ளார்.

Related Stories:

>