×

நவீன வாழ்க்கையில் பயன்பாடு குறைவு: வாடுது வெற்றிலை விவசாயம்: மதிப்புக்கூட்டி பொருள்கள் தயாரிக்க அரசு உதவுமா?

திருப்புவனம்: நவீன வாழ்க்கையில் வெற்றிலை பயன்பாடு குறைந்து வருகிறது. இதனால் வெற்றிலை விவசாயம் அழிவின் விளிம்பில் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் வெற்றிலை கொடிக்கால் விவசாயம் மிகவும் பிரபலமானது. இங்கிருந்து காரைக்குடி, திருவாடானை, அறந்தாங்கி, பட்டுகோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கும், பெங்களூரு போன்ற வெளி மாநிலங்களுக்கும் வெற்றிலை கொண்டு செல்லப்பட்டது. சாகுபடியில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெற்றிலை கொடிக்கால் விவசாயிகளுக்கென 2 சங்கங்கள் இயங்கி வருகின்றன.

தற்போது வெற்றிலை பயன்பாடு குறைந்து வருகிறது. தெருவுக்குதெரு வெற்றிலை பாக்கு கடைகள் இருந்த நிலை மாறிவிட்டது. இதனால் வெற்றிலை விவசாயமே அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த கொடுமையில் தற்போது கொரோனா ஊரடங்கும் சேர்ந்து கொண்டுள்ளது. ஊரடங்கால் திருமணம் போன்ற விழாக்கள் பெரிய அளவில் நடைபெறவில்லை. இதனால் வெற்றிலை பயன்பாடு பெருமளவில் சரிந்துவிட்டது. சாகுபடி செய்த வெற்றிலையை என்ன செய்வது என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.

கொடிக்கால் விவசாயி கருப்புசாமி கூறுகையில், ‘‘வெற்றிலை கொடிக்கால் விவசாயத்தில் ஈடுபடுவோர் நிலமற்ற விவசாயிகள்தான். மூன்று வருட சாகுபடி பயிரான கொடிக்கால் விவசாயத்தை குத்தகை அடிப்படையில்தான் ெசய்து வருகிறோம். இதனால் வங்கிகளில் கடன் வழங்குவதில்லை. தமிழக அரசின் தோட்டக்கலைத்துறையின் கீழ் வரும் வெற்றிலை பயிர், காப்பீடு திட்டத்திலும் சேர்க்கப்படுவதில்லை.

இதனால் மிகவும் பாதிக்கப்படுகிறோம். இந்த சூழலில் தற்போது கொரோனா ஊரடங்கும் சேர்ந்து வாட்டுகிறது. உடனடியாக ஊரடங்கை தளர்த்தி விழாக்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். அப்போதுதான் வெற்றிலை பயன்பாடு கொஞ்சமாவது இருக்கும். நாங்களும் பிழைக்க முடியும்’’ என்றார்.

‘வெற்றிலை குளிர்பானம்’ கலக்கும் மேற்குவங்கம்
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க செயலாளர் ஆதிமூலம் கூறுகையில், ‘‘மூலிகை குணம் கொண்ட வெற்றிலை பல்வேறு நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது. சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் வெற்றிலை போடும் பழக்கம் குறைந்து வருவதால் மதிப்புக் கூட்டி பொடியாக தயாரித்து 100 கிராம் ரூ.750க்கு விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. எனவே வெற்றிலையின் மகத்துவம் அறிந்த வெளிநாடுகளுக்கு நாம் ஏற்றுமதி செய்யலாம்.

சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன், சிங்கப்பூர் காய்கறி வியாபாரிகளிடம் பேசி காய்கறிகளுடன் வெற்றிலையை கப்பல் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்தார். கப்பலில் செல்ல சில நாட்கள் ஆவதால் வெற்றிலை அழுகி விடுகிறது. வெளிநாடுகளுக்கு விமானம் மூலம் மல்லிகை பூவை அனுப்புவது போல, வெற்றிலையையும் அனுப்பினால் விவசாயிகள் வளம் பெறுவார்கள். மேற்குவங்கத்தில் வெற்றிலையை மதிப்புக்கூட்டி குளிர்பானமாக விற்பனை செய்கிறார்கள். அதே போன்ற நடவடிக்கைகளை தமிழக அரசும் எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Modern life, betel, agriculture
× RELATED சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண்...