×

அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா.. பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் பூமி பூஜை விழாவில் பங்கேற்றவர்

அயோத்தி: ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மகந்த் கோபால் தாஸுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரே மேடையில் பங்கேற்றவர் இவராகும். உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் 9ம் தேதி அனுமதி வழங்கியது. அதன் உத்தரவுப்படி, கடந்த 5ம் தேதி கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

இந்த விழாவின் போது, ராம ஜென்ம பூமியில் பூமி பூஜை நடக்கும் மேடையில் பிரதமர் மோடியுடன் ஆதித்யநாத், உபி ஆளுநர் ஆனந்தி பென் படேல், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மகந்த் நிருத்திய கோபால் தாஸ் ஆகியோர் மட்டுமே பங்கேற்றனர். அனைவரும் முகக்கவசத்துடன் சமூக இடைவெளி விட்டு அமர்ந்திருந்தனர். சிவப்பு நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் அடிக்கல் நாட்டும் இடத்தில் வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க பூஜையை நடத்தினர். பின்னர், வேதமந்திரங்கள் முழங்க, கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார்.

இந்த நிலையில் மேடையில் பிரதமர் மோடியுடன் இருந்த ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மகந்த் கோபால் தாஸுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அறிகுறிகள் இருந்ததை அடுத்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகியபோது, இந்த தகவல் தெரியவந்தது. ஒருவேளை, பூமி பூஜையின்போதே, இவருக்கு கொரோனா பாதிப்பு இருந்திருந்தால், அது பிறருக்கு பரவும் வாய்ப்பை மறுக்க முடியாது என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Corona ,Ayodhya Ram Temple Trust Corona ,Ayodhya Ram Temple Foundation , Corona to head Ayodhya Ram Temple Foundation
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...