×

பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ, விழா கொண்டாடுவதோ கூடாது: விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு.!!!

சென்னை: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை 22.8.2020 அன்று கொண்டாடப்பட  இருக்கிறது. கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்க பொது விழாக்களை தவிர்க்கவும், பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதைத் தவிர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ, அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்  செல்வதோ, அச்சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதோ தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது. எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலிலேயே கொண்டாட  அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், பண்டிகை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கோ, சந்தைகளுக்கோ செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திட வேண்டும் என்றும் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க  வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. சிறிய திருக்கோவில்களில் பொதுமக்கள் வழிபட அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில் அத்தகைய திருக்கோவில்களில் வழிபாடு செய்யும்போது அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு  நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்குமாறு பொதுமக்களும், திருக்கோவில் நிர்வாகமும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், அவ்வாறு வழிபாட்டுத்தலங்களுக்கும், பொது இடங்களுக்கும் செல்பவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து, உரிய சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Ganesha Chaturthi ,processions ,places ,Government of Tamil Nadu , Ganesha statues should not be installed or celebrated in public places: Government of Tamil Nadu orders ban on Ganesha Chaturthi processions !!!
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்