×

பெரம்பலூர் மாவட்டத்திலேயே விதை வெங்காயத்திற்கு தட்டுப்பாடு: வெங்காய வணிக வளாகத்தை மீண்டும் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!!

பெரம்பலூர்:  பெரம்பலூர் மாவட்டத்தில் விதை வெங்காயத்திற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கிடப்பில் போட்ட  வெங்காய வணிக வளாகத்தை மீண்டும் திறக்கக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சின்ன வெங்காய  உற்பத்தியில் தமிழ்நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கிறது பெரம்பலூர் மாவட்டம். இந்நிலையில் செட்டிகுளம், இரூர்,  எசனை உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நல்ல மண்வளம்,  மிதமான காலநிலை ஆகிய காரணங்களால் பெரம்பலூர் சின்ன வெங்காயம் அதிக முளைப்பு திறனோடு வேகமாக  வளர்ந்து, நல்ல விளைச்சலை தரும்.

இதனாலேயே வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் விதைக்காக பெரம்பலூரில்  வெங்காயம் வாங்கி செல்கின்றனர். இதனால் பெரம்பலூரை வெங்காய நாற்றங்கால் என்று சொல்லுவார்கள். ஆனால்  தற்போதுள்ள சூழலில் பெரம்பலூர் மாவட்டத்திலேயே விதை வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெங்காய  உற்பத்தி பெருக்கத்திற்காக விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று செட்டிகுளத்தில் அமைக்கப்பட்டு நன்கு செயல்பட்டு  வந்த சேமிப்பு கிடங்கு மற்றும் வெங்காய வணிக வளாகங்கள் உள்ளிட்ட சிறப்பு திட்டங்கள் கடந்த 3 ஆண்டுகளாக  கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இதனால் சின்ன வெங்காய தட்டுப்பாட்டிற்கு இது ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக  விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அதோடு, கொரோனா ஊரடங்குக்கு முன்பே வெளிமாநில வியாபாரிகள் விதை  வெங்காயத்தை அதிகளவில் வாங்கி சென்று விட்டனர். இதனால் தற்போது உள்ளூர் சாகுபடிக்கே விதை கிடைக்காமல்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் வெங்காயத்தை அத்தியாவசிய பொருள்  பட்டியலிலிருந்து மத்திய அரசு நீக்கியுள்ளதால், ஏற்றுமதி தடை விலகி வெங்காயத்திற்கு நல்ல கொள்முதல் விலை  கிடைக்குமென விவசாயிகள் காத்திருந்தனர்.

ஆனால் தற்போது குறுவை சாகுபடியே கேள்விக்குறியாகியுள்ளது. உரலுக்கு  ஒரு பக்கம் இடி, மத்தளத்திற்கு இரு பக்கமும் இடி என்பதைப்போல வெங்காயத்திற்கு நல்ல விலையும் கிடைக்காமல்,  விதை வெங்காயத்தை சேமித்து வைக்கவும் வழி இல்லாமல், பெரம்பலூர் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால்  முடங்கி கிடைக்கும் சேமிப்பு கிடங்கு மற்றும் வெங்காய வணிக வளாகத்தை மீண்டும் திறப்பதே இதற்கு தீர்வாக  அமையும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : district ,Perambalur , Shortage of seed onions in Perambalur district: Farmers demand reopening of onion business premises !!!
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...