பீகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் விரிசல்!: முதல்வர் நிதிஷ்குமாருக்கு எதிராக லோக் ஜனசக்தி கட்சி போர்க்கொடி..!!

பாட்னா: பீகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் நிதிஷ்குமாருக்கு எதிராக லோக் ஜனசக்தி கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது. வரும் அக்டொபர் மாதம் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள அம்மாநிலத்தில், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு தற்போதே தொடங்கியுள்ளது. முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், பாரதிய ஜனதா கட்சியும் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளன. இதனால் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி அதிருப்தி அடைந்துள்ளது.

 பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் 120 இடங்களில் போட்டியிட விரும்புகிறது. 102 இடங்களுக்கு குறையாமல் போட்டியிட பாரதிய ஜனதா கட்சி விரும்புகிறது. லோக் ஜனசக்தி கட்சிக்கு வெறும் 21 இடங்களை மட்டுமே விட்டுக்கொடுக்க இருகட்சிகளும் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த ராம் விலாஸ் பஸ்வானின் மகனும், லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான சிராக் பஸ்வான் முதல்வர் நிதிஷ்குமாரை தொடர்பு கொள்ள முயன்று தோல்வியடைந்தார். கடந்த ஓராண்டாக தொலைபேசி மற்றும் கடிதம் மூலம் நிதிஷ்குமாரை தொடர்பு கொண்டு பேச முயன்றதாக சிராக் பஸ்வான் கூறியுள்ளார்.

ஆனால் முதல்வரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமது கட்சிக்கு 42 இடங்கள் ஒதுக்கப்பட்டதாகவும், ஆகையால் புதிதாக பேச்சு நடத்த அவசியமில்லை என்றும் சிராக் பஸ்வான் குறிப்பிட்டுள்ளார். இதனால் பீகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி நீடிக்குமா அல்லது பிளவுபடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories: