வான்வழி வந்தோர் மேன்மக்களல்லர்; மண்வழி சென்றோர் கீழ்மக்களல்லர் : கேரள நிலச்சரிவு மீட்புப் பணி குறித்து வைரமுத்து ஆதங்கம்!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி நிலச்சரிவில் சிக்கி 80க்கும் மேற்பட்ட தமிழக தோட்டத் தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். இதில் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 55 பேர் சடலமாக நேற்று வரை மீட்கப்பட்டு இருந்தனர்.கேரள அமைச்சரவை கூட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடந்தது. இதில், நிலச்சரிவில் சிக்கியவர்களின் உறவினர்களின் மறு வாழ்விற்கு தேவையான திட்டங்களை விரைந்து செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, பலியானவர்களின் உறவினர்களுக்கு வீடு, அரசு வேலை மற்றும் குழந்தைகள் கல்வி செலவு முழுவதையும் அரசு ஏற்கும். காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே கேரள மாநிலம், கோழிக்கோட்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 19-ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. இதேபோல் மத்திய அரசும், விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மேற்கண்ட 2 வேறு நிகழ்வுகளையும் ஒப்பிட்டு கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார். அதில் கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் கேரள அரசு மேற்கொண்ட மீட்புப் பணி மற்றும் நிவாரணம் குறித்த அறிவிப்புகளை பாராட்டுகிறோம். ஆனால் அதே சமயம் நிலச்சரிவில் மண்ணில் புதைந்த

மக்களுக்கும் விரைந்த மீட்பும் தகுந்த பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்

விமான விபத்து மீட்சியைத்

திறம்பட நிகழ்த்திய கேரள

ஆட்சியைப் பாராட்டுகிறோம்.

அதேபோல் மண்ணில் புதைந்த

மக்களுக்கும் விரைந்த மீட்பும்

தகுந்த காப்பும் வழங்க வேண்டுகிறோம்.

வான்வழி வந்தோர் மேன்மக்களல்லர்;

மண்வழி சென்றோர் கீழ்மக்களல்லர் என்பது பொதுவுடைமை பூமிக்குப்

புரியாதா என்ன? எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: