சி.பி.ஐ. அதிகாரிகள் போல் நடித்து நகை, பணம் கொள்ளையடித்த வழக்கு!: திண்டுக்கல்லில் பெண் உள்ளிட்ட 6 பேர் கைது..!!

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சி.பி.ஐ. அதிகாரிகள் போல நடித்து நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் பெண் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பொன்னகரத்தில் உள்ள காளீஸ்வரன் என்பவரது வீட்டில் கடந்த ஆண்டு கொள்ளை அரங்கேற்றப்பட்டுள்ளது. மதுக்கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் அவரது வீட்டிற்கு காரில் வந்த 6 பேர் சி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறி பணம் மற்றும் நகைகளை அள்ளிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் காளீஸ்வரனின் உறவினர் கோபி மற்றும் அவரது நண்பர்கள் மாலதி, வினோத், ஐய்யப்பராஜன், முத்துக்குமார், குகன் செட்டி ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

6 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. காளீஸ்வரன் வீட்டில் கொள்ளையடித்த பணத்தில் திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல ஊர்களில் 5 கோடி ரூபாய்க்கு சொத்துக்களை வாங்கி குவித்தது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து 100 சவரன் நகைகள், 5 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, 15 சவரன் நகைகள் மட்டுமே கொள்ளைபோனதாக காளீஸ்வரன் புகார் கூறியிருக்கிறார்.

ஆனால் கொள்ளையர்களிடம் இருந்து கோடி கணக்கில் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே மேற்பார்வையாளராக பணியாற்றும் காளீஸ்வரனுக்கு கோடி கணக்கில் பணம் வந்தது எப்படி என்பது குறித்து வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கவுள்ளனர்.

Related Stories:

>