சொத்து வரி பரிமாற்றம் செய்ய ரூ.30 ஆயிரம் லஞ்சம் வரி மதிப்பீட்டாளர் உள்பட இருவர் கைது

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் சொத்து வரி பரிமாற்றம் செய்ய ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்க முயன்ற மதிப்பீட்டாளர் மற்றும் மாநகராட்சி ஊழியர் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

திருவொற்றியூர் எர்ணாவூர் பகுதி ஆல் இந்தியா ரேடியோ நகரை சேர்ந்தவர் சுரேஷ் (35). இவர் தனது தனது வீட்டின் ஒரு பகுதியில் அலுவலகம் ஒன்றை வைத்து அங்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், வணிகத்திற்காக பயன்படுத்தி வந்த அலுவலகத்தை அகற்றிவிட்டு வீடாக மாற்றி அமைத்துள்ளார். இதனையடுத்து, தனது வீட்டை வணிக பயன்பாட்டிலிருந்து வசிப்பிடமாக மாற்றிட சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில் உள்ள உதவி வருவாய் அலுவலரிடம் மனு அளித்திருந்தார். இந்த மனுவை பரிசீலித்த உதவி வருவாய் அலுவலர் சொத்துவரி மதிப்பீட்டாளர் பிரபு என்பவரை சுரேஷின் வீட்டிற்கு அனுப்பி வீட்டினை அளவீடு செய்தார். இதற்கிடையில் சொத்து வரி மாற்றம் செய்து ஆணை வழங்க ரூ.30,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, சுரேஷ் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளின் அறிவுரையின் பேரில் நேற்று முன்தினம் மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு வந்த சுரேஷ் முதல் தவணையாக ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை வரி மதிப்பீட்டாளர் பிரபுவிடம் லஞ்சமாக கொடுத்தார். அதை பிரபு பெற்றுக் கொண்டபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பிரபுவையும் அவருக்கு உதவியாக செயல்பட்ட மாநகராட்சி ஊழியர் நல்ல தம்பியையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து லஞ்ச பணத்தை பறிமுதல் செய்து உதவி வருவாய் அலுவலர் மற்றும் அங்குள்ள பணியாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவொற்றியூரில் சொத்துவரி கட்டணம் அதிக அளவில் உள்ளது. இதனால் வரிகட்ட முடியாமல் பலர் திண்டாடி வருகின்றனர். இதைப் பயன்படுத்திக் கொண்ட மண்டல வருவாய்த் துறையினர் சொத்து வரி விதிப்பது வசூலிப்பது போன்றவைகளுக்காக லஞ்சம் கேட்பதாக பொதுமக்கள் பல்வேறு புகார்களை தெரிவித்து வருகின்றனர். வரி மதிப்பீட்டாளர் மற்றும் மாநகராட்சி ஊழியர் இருவரும் லஞ்சம் வாங்கும் போது பிடிபட்டு கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>