×

ஓட்டேரியில் பரபரப்பு மூதாட்டிகள் வசித்த வீட்டில் ரூ.2 லட்சம் கண்டெடுப்பு

சென்னை: ஓட்டேரி சத்தியவாணிமுத்து நகர் பி-பிளாக்கில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ராஜேஸ்வரி (61), விஜயலட்சுமி (59), மகேஸ்வரி (57) ஆகிய சகோதரிகள் வசித்து வந்தனர். இதில், மகேஸ்வரி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அப்பகுதியில் உள்ள நடைபாதையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த அங்கு சென்ற தலைமைச் செயலக காலனி போலீசார், மகேஸ்வரியின் உடலை மீட்டு அடக்கம் செய்தனர். இந்நிலையில், அவருடைய சகோதரிகள் கடந்த சில நாட்களாக சாலையோரம் தங்கி வந்தனர். அவர்களிடம் விசாரித்த தலைமை செயலக காலனி போலீசார் வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

வீடு இருந்தும் வீட்டில் தங்க இடம் இல்லை என்று மூதாட்டிகள் கூறியதை கேட்டு போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, வீட்டிற்குள் குப்பைகள் குவியல் குவியலாக மூட்டை கட்டப்பட்டிருந்தன. போலீசார் மாநகராட்சி உதவியுடன் அந்த குப்பைகளை அள்ளி சென்றனர். அப்போது, அந்த வீட்டில் ஆங்காங்கே பணம் சிதறி இருப்பதை கண்டு அதை சேகரித்து எண்ணிப் பார்த்ததில் 2 லட்சத்துக்கும் அதிகமான பணம் இருப்பது தெரியவந்தது. மேலும், செல்லா நோட்டுகளான பழைய 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளும் சுமார் 40,000 வரை இருந்தது. மேலும், நான்கு குடங்களில் சில்லரை காசுகளும் கிடந்தன. போலீசார் வீட்டில் இருந்த குப்பைகள் அனைத்தையும் அகற்றி வீட்டை சுத்தம் செய்து பணத்தை அவர்கள் வீட்டிலேயே வைத்து சீல் வைத்தனர். மேலும், வீட்டை இன்னும் கொஞ்சம் சுத்தம் செய்யவேண்டி உள்ளதாகவும் அதன் பின்பு வீடு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களது பணமும் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.


Tags : Otteri , Otteri, grandmothers, house lived, Rs 2 lakh, discovery
× RELATED சென்னை ஓட்டேரியில் ரவுடிகள் மீது மர்ம...