×

தொழில்நுட்ப கல்லூரிகளில் 1.5 லட்சம் சீட் குறைப்பு பார்மா, ஆர்கிடெக்சருக்கு அட்ரா சக்கை... அட்ரா சக்கை: கொரோனா காலத்தில் தலைகீழான படிப்புகள்

புதுடெல்லி: கொரோனா எல்லா வகையிலும் இதுவரை இருந்த விஷயங்களை புரட்டிப்போட்ட நிலையில், கல்வித்துறையையும் விடவில்லை; வழக்கமாகவே தொழில்நுட்ப படிப்புகளுக்கு மவுசு படிப்படியாக குறைந்த நிலையில், இப்போது பார்மா, ஆர்கிடெக்சர் படிப்புகளுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. இதுவரை வழக்கமாக இருந்த கல்லூரி படிப்புகள், இனி ஆன்லைனில் எப்படியெல்லாம் மாறப்போகிறதோ என்ற நிலை உருவாகி வருகிறது. பல கல்லூரிகளில் ஏற்கனவே கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆட்டோமோபைல் உட்பட சில பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வந்த நிலையில், இந்தாண்டு மேலும் சீட்கள் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கல்லூரிகளுக்கு அங்கீகாரமும், படிப்பு பிரிவுகளுக்கு அப்ரூவலும் தரும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வசம் உள்ள தொழில்நுட்ப கல்லூரிகளின் சீட்கள் கிட்டத்தட்ட 1.5 லட்சம் சீட்கள் இந்த முறை குறைக்க வேண்டிய நிலை  ஏற்பட்டுள்ளது. இதில் அகில இந்திய தேர்வு மூலம் ஒதுக்கப்படும் 34 ஆயிரம் சீட்கள் மற்றும் கல்லூரிகள் நிரப்பிக் கொள்ளக்கூடிய 1.09 லட்சம் சீட்கள் மாணவர்கள் சேராததால் குறைக்கப்பட்டன. இதில் சில கல்லூரிகள், சில கல்லூரிகளில் படிப்பு பிரிவுகள் மூடப்பட்டதாலும் சீட்கள் குறைந்தன. இந்நிலையில், இந்தாண்டு திடீரென பார்மா என்று சொல்லப்படும் மருந்தியல் படிப்புகள், ஆர்கிடெக்சர் படிப்புகளுக்கு அதிரடியாக கிராக்கி ஏற்பட்டுள்ளது.   

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, பார்மா படிப்புகளுக்கு அகில இந்திய பார்மா கவுன்சில், ஆர்கிடெக்சர் படிப்புகளுக்கு அகில இந்திய ஆர்சிடெக்சர் கவுன்சில் தான் அமைக்கப்பட்டு, அவை தான் அப்ரூவல் தர வேண்டும் என்று சொன்னதால், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலுக்கு இந்த இரு வகை கல்லூரிகள், படிப்புகளுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விட்டது. கொரோனா காலகட்டத்தில் இந்த இரு பாடப்பிரிவுகளுக்கு திடீரென மவுசு ஏற்பட்டுள்ளது. பலரும் இந்த பாடப்பிரிவுகளை இந்தாண்டு தேர்ந்ெதடுத்துள்ளனர். அதிலும், மருந்தியல் படிப்புகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதாக கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தரப்பில் கூறியதாவது: கொரானா ஊரடங்கால் இந்தாண்டு பல விஷயங்கள் புரட்டிப்போடப்பட்டன. எனினும், கவுன்சிலை பொறுத்தவரை, கல்லூரிகளுக்கான அங்கீகாரம், சீட்களுக்கான அப்ரூவல் எல்லாம் ஆன்லைனில் மே மாதம் துவங்கி ஒரு மாதத்தில் முடிக்கப்பட்டன. கடந்தாண்டை விட, இந்தாண்டு பல காரணங்களால் கல்லூரிகள் மற்றும் சீட்கள் எண்ணிக்கை குறைந்து போயின. இந்தியாவில் மொத்தம் கடந்த 2019 -20ல் 10,992 கல்லூரிகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவற்றில் மொத்தம் 32 லட்சத்து 9 ஆயிரத்து 703 சீட்கள் அப்ரூவல் செய்யப்பட்டன. இந்தாண்டு, 2020 -21ல் 9691 கல்லூரிகளாக குறைந்து  போனது மட்டுமின்றி, சீட்கள் எண்ணிக்கை 30 லட்சத்து 88 ஆயிரத்து 512 ஆக குறைந்து போனது. எனினும் இந்தாண்டு நாடு முழுவதும் 164 கல்லூரிகள் புதிதாக அங்கீகாரம் பெற்றன. அவற்றில் சீட்கள் 39,656 அப்ரூவல் அளிக்கப்பட்டது.

மேலும் பார்மா, ஆர்கிடெக்சர் உட்பட புதிய படிப்பு பிரிவுகளால் 1 லட்சத்து 2 ஆயிரத்து 357 சீட்கள் புதிதாக அப்ரூவல் தரப்பட்டுள்ளன. இதனால், குறைக்கப்பட்ட சீட்கள் இந்த வகையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் மாணவர்களிடையே கிராக்கியும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் சார்ந்த துறைகளுக்கு ஆர்கிடெக்சர் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தான் கொரோனா காலத்தில் மவுசு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தாண்டு இந்த பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : colleges ,Adra Sakkai ,Corona , College of Technology, 1.5 lakh seat reduction, Pharma, Architecture, Corona period, inverted courses
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...