தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை நாய்க்கு போடும் கழுத்து பெல்ட்டால் சுஷாந்த் கொல்லப்பட்டு இருக்கலாம்: முன்னாள் உதவியாளர் திடுக் தகவல்

மும்பை: ‘நடிகர் சுஷாந்த் சிங் கொலைதான் செய்யப்பட்டிருக்க வேண்டும்,’ என்று அவரது முன்னாள் உதவியாளர் தெரிவித்துள்ளார். பிரபல நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது தற்கொலையின் பின்னணியில் பாலிவுட் பிரபலங்கள், சில அரசியல்வாதிகள் இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. இவர்களின் நிர்பந்தம் காரணமாக, விசாரணையில் மும்பை போலீசார் பாரபட்சமாக நடந்து கொள்வதாக விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில், சுஷாந்த் சிங்கின் முன்னாள் உதவியாளர் அங்கித் ஆச்சார்யா நேற்று கூறியதாவது;

கடந்த 2017 ஜூலை முதல் 2019 ஜூலை வரை நான் சுஷாந்த் சிங்கின் தனி உதவியாளராக இருந்தேன். அவரது கால்ஷீட்டை கவனித்துக் கொள்வது உட்பட எல்லா வேலைகளையும் கவனித்துக் கொண்டேன். 24 மணி நேரமும் அவருடனே இருந்தேன். என்னை அவர் குடும்பத்தில் ஒருவராகவே நடத்தினார். ஆனால், சுஷாந்திடம் இருந்து நான் திடீரென பிரிக்கப்பட்டேன்.  சுஷாந்த் மிக மகிழ்ச்சியான மனிதர். தான் மட்டுமின்றி, தன்னுடன் இருப்பவர்களையும் எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள விரும்புவார். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை.

எந்தவொரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது என்று கருதுபவர் அவர். அப்படிப்பட்டவர் தற்கொலை செய்ய வாய்ப்பே இல்லை. அவர் கொலைதான் செய்யப்பட்டிருக்க வேண்டும். இறந்து கிடந்த சுஷாந்தின் கண்ணுக்கு அருகில் லேசான கீறல் இருந்தது. அவரது கழுத்து இறுக்கப்பட்டு இருந்தற்கான காயம் தென்பட்டது. ஆனால், துணியால் தூக்கு போட்டிருந்தால் அப்படி காயம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. நாய்களுக்கு கழுத்தில் அணிவிக்கும் தோள்பட்டையால் கழுத்து இறுக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* ரியா வந்த பின்னர் தான் எல்லாமே மாறியது

அங்கித் மேலும் கூறுகையில், ‘‘சுஷாந்துடன் நடிகை ரியா நெருக்கமாக பழகத் தொடங்கிய பிறகுதான் நான் அவரிடம் இருந்து பிரிக்கப்பட்டேன். நான் ரியாவை சந்தித்ததில்லை. நான் கடைசியாக சம்பளம் வாங்குவதற்காக சுஷாந்த் அலுவலகத்துக்கு சென்றேன். ஆனால், அவரை சந்திக்க என்னை அனுமதிக்கவில்லை. அங்கிருந்து திரும்பும் போது, சுஷாந்தை பார்த்து கையசைத்தேன். அவர் என்னை பார்த்தபோது மிக சோகமாக கையசைத்தார். அவரது முகத்தில் பழைய மகிழ்ச்சி இல்லை,’’ என்றார்.

Related Stories: