×

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மாணவர்களை விட பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவுக்கு சிவில் சர்வீஸ் தேர்வில் குறைந்த கட்ஆப் மார்க்: பிரதான தேர்வில் 10, 3 மதிப்பெண்கள் வித்தியாசம்

புதுடெல்லி: சிவில் சர்வீஸ் பிரதான தேர்வில் தாழ்த்தப்பட்ட  மாணவர்களை விட பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கான (இடபிள்யூஎஸ்) தகுதி மதிப்பெண் (கட்ஆப் மார்க்) மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டுக்கான (2020) ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான முடிவு கடந்த 5ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், மொத்தம் 829 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பொதுப்பிரிவில் 304 பேரும், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவில் 78 பேரும், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 251 பேரும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவில் முறையே 129 மற்றும் 67 பேரும் தேர்வாகி இருந்தனர். இத்தேர்வில் இந்தாண்டுதான் முதல்முறையாக பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், பிரதான தேர்வில் (மெயின்) தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின பிரிவினர்களை விட, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கான கட்ஆப் மதிப்பெண் குறைவாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வு, முதல்நிலை தேர்வு, பிரதான தேர்வு மற்றும் இறுதி நேர்காணல் என 3 நிலைகளை கொண்டது.  இதில், பொதுப்பிரிவினருக்கு முதல்நிலை தேர்வில் கட்ஆப் மதிப்பெண்ணாக 98ம், பிரதான தேர்வில் கட்ஆப் மதிப்பெண்ணாக 751ம், நேர்காணலுக்கான கட்ஆப் மதிப்பெண்ணாக 961ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு முறையே 90, 696 மற்றும் 909 என மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான கட்ஆப் மதிப்பெண்களாக முறையே 95.3, 718 மற்றும் 925 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி) பிரிவினருக்கும் முறையே 82, 706, 898 எனவும், பழங்குடியினர் (எஸ்டி) பிரிவினருக்கு முறையே 77.3, 699, மற்றும் 893 எனவும் கட்ஆப் மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், பிரதான தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரை விட பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கான கட்ஆப் மதிப்பெண்கள் முறையே 10, 3 என குறைவாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

* உச்சநீதிமன்றத்தில் நிலுவை
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கும் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்தாண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இது, அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடஒதுக்கீட்டுக்கு எதிரானது என உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவை நிலுவையில் உள்ளன. கடந்த வாரம்தான் இந்த வழக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்பட்டது.

* மாறுதலுக்கு உட்பட்டது
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு கட்ஆப் மதிப்பெண்கள் குறைவாக நிர்ணயிக்கப்பட்டது பற்றி எழுந்துள்ள சர்ச்சை பற்றி யுபிஎஸ்சி அளித்துள்ள விளக்கத்தில், ‘கட் ஆப் மதிப்பெண்கள் மாற்றங்களுக்கு உட்பட்டவை.  நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், நீதிமன்ற உத்தரவின் பேரில் தேவைப்பட்டால் கட்ஆப் மதிப்பெண்கள் மாறுதலுக்கு உட்படுத்தப்படும்,’ என கூறப்பட்டுள்ளது.

Tags : underprivileged ,examination ,Civil Service Examination ,class , Low cut-off mark in civil service exam for economically backward upper class than underprivileged, tribal students: 10, 3 marks difference in main exam
× RELATED இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்ப...