எனது தந்தைக்கு எது நல்லதோ அதையே கடவுள் வழங்குவார்: பிரணாப் மகள் உருக்கம்

புதுடெல்லி: முன்னாள் ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜிக்கு கடந்த 10ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மூளையில் ரத்த உறைவும் கண்டுபிடிக்கப்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நேற்றும் மருத்துவர்கள் கூறினர்.

இந்நிலையில். காங்கிரஸ் மகளிர் பிரிவு தலைவர்களில் ஒருவரும், பிரணாப்பின் மகளுமான ஷர்மிஷ்தா நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம்தான் நாட்டின் முதன்மை விருதான பாரத ரத்னாவை என் தந்தை பெற்றார். இந்த ஆகஸ்ட்டில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். எது நல்லதோ, எது சிறந்ததோ, அதை மட்டுமே என் தந்தைக்கு கடவுள் கொடுத்திருக்கிறார். இந்த முறையும் அப்படியே நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். அதேநேரத்தில் மகிழ்ச்சியோ, துக்கமோ எதுவாக இருப்பினும் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன்,’ என்று கூறியுள்ளார். தற்போது 84 வயதாகும் பிரணாப் முகர்ஜி, கடந்த 2012ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக பதவி வகித்தார். மேலும், காங்கிரசின் பலம் பொருந்திய தலைவராகவும், பலமுறை மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.

Related Stories: