திருச்சியில் சிக்கினார் அபின் கடத்திய பாஜ நிர்வாகி கைது

திருச்சி: திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த குற்றதடுப்பு நுண்ணறிவு பிரிவு (ஓசிஐயு) போலீசார் மன்னார்புரம் பகுதியில் கடந்த 10ம்தேதி இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியே வந்த ஒரு காரை மறித்து சோதனையிட்டபோது அபின் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், பெரம்பலூரை சேர்ந்த அடைக்கலராஜ், ஜெயபிரகாஷ் என்பதும், இருவரும் அபின் போதை பொருள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இவர்களில் அடைக்கலராஜ் பாஜகவின் ஓபிசி அணியின் மாநில செயற்குழு உறுப்பினரும், பெரம்பலூர் மாவட்ட முன்னாள் துணை தலைவராகவும் இருந்தவர் என்பது தெரிய வந்தது. இருவரும் அளித்த தகவலின்பேரில் பெரம்பலூரை சேர்ந்த சித்தா டாக்டர் மோகன்பாபு, ஆறுமுகம், பாலசுப்ரமணியன், அத்தடையான் ஆகிய 4 பேரையும் கைது செய்து திருச்சிக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்களிடமிருந்து இரண்டு கார், ஒரு கிலோ 800 கிராம் அபின் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.15 லட்சமாகும். பிடிபட்ட 6 பேரும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘சித்தா டாக்டர் வீடு அருகில்தான் பாஜ பிரமுகர் அடைக்கலராஜ் வசிக்கிறார். அவசர தேவை என்று கூறி சித்தா டாக்டரின் காரை அடைக்கலராஜ் வாங்கிக்கொண்டு, தனது காரை அவரிடம் கொடுத்துள்ளார். அந்த காரில் அபின் கடத்தும் போது சிக்கிக் கொண்டார்.  அபின் எப்படி கிடைத்தது என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றனர். இதற்கிடையே கட்சிக்கு களங்கம் விளைவித்ததால் பாஜவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து அடைக்கலராஜ்  நீக்கப்படுவதாக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் அறிவித்துள்ளார்.

Related Stories:

>