முதல்வர் வேட்பாளர் யார்? அதிமுக அமைச்சர்கள் மீண்டும் மோதல்

சென்னை: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சிதான் முடிவு செய்யும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கொளுத்திப் போட்டது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர் என ஒரு பிரிவும். இல்லை, இல்லை.. கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முடிவெடுப்பார்கள் என மற்றொரு பிரிவும் அணி பிரிந்து நிற்கிறது. இதை முன்னிட்டு அமைச்சர்களுக்குள் மோதல் எழுந்துள்ளது. செல்லூர் ராஜூவின் கருத்தை ஒட்டியே அமைச்சர் ஜெயக்குமாரும் கருத்து தெரிவித்துள்ளார். ‘அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா, ஓ.பன்னீர்செல்வமா என்பது குறித்து கட்சிதான் முடிவு எடுக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி வர வேண்டும் என்றுதான் அதிமுகவின் அடிமட்ட தொண்டன் முதல் நிர்வாகிகள் வரை நினைக்கின்றனர்’ என ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதேநேரத்தில் அமைச்சர் உதயகுமார், முதல்வர் எடப்பாடிக்கு தனது விசுவாசத்தை காட்டியுள்ளார். மதுரையில் நேற்று பேட்டியளித்த அவர், ‘எடப்பாடிதான் அடுத்த முதல்வர் வேட்பாளர்’ என சூடம் கொளுத்தாத குறையாக அடித்துக் கூறியுள்ளார். ‘‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, தமிழகத்தில் அதிமுக அரசு நிற்குமா, நிலைக்குமா என்ற நிலை இருந்தது. எளிமையின் அடையாளமாக திகழும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக அரசு வலிமையான அரசு என்பதை நிரூபித்து காட்டியுள்ளார். துணை முதல்வரும், மூத்த அமைச்சர்களும் முதல்வருக்கு அயராது துணை நிற்கிறார்கள். 2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழக சட்டமன்றத்தில் காலியாக உள்ள எம்எல்ஏ பதவிக்கான இடைத்தேர்தல், மினி பொதுத்தேர்தல் போல் நடைபெற்றது.

முதல்வராக எடப்பாடி பழனிசாமியையும், துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தையும் முன்னிலைப்படுத்தி தேர்தல் களத்தை சந்தித்தோம். அதே வழியில் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஆதரிப்போம். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இதைத்தான் கூறியிருக்கிறார். இந்த கருத்துதான் தொண்டர்களின் கருத்தாகவும் உள்ளது’’ என அமைச்சர் உதயகுமார் தெரிவித்திருக்கிறார். இது குறித்து கட்சியின் எம்பியும், துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி ‘தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ளன. அதற்குள் முதல்வர் வேட்பாளர் குறித்து பேச வேண்டாம். கட்சி தலைமை இது குறித்து முடிவு செய்யும்’’ என கூறியுள்ளார். முதல்வர் வேட்பாளரை தீர்மானிப்பதில் மூத்த அமைச்சர்களிடையே மோதல் போக்கு எழுந்துள்ளது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர் என ஒரு பிரிவும். இல்லை, இல்லை.. கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முடிவெடுப்பார்கள் என மற்றொரு பிரிவும் அணி பிரிந்து நிற்கிறது.

Related Stories: