×

ஆடிக்கிருத்திகைக்கு முருகன் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்த ஊரடங்கை மீறிய பக்தர்கள்: அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஆடி கிருத்திகை விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த 5 மாதங்களாக அனைத்து கோயில்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் சிறு கோயில்கள், பக்தர்கள் அதிக அளவில் கூடாத கோயில்களில் சமூக இடைவெளியுடன் வழிபாடு நடத்தலாம் என ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டது. இதையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் வல்லக்கோட்டை, காஞ்சிபுரம் குமரக்கோட்டம், இளையனார் வேலூர் முருகன் கோயில் உள்பட பல கோயில்கள் மூடப்பட்டு இருந்தபோதும், ஆடிக் கிருத்திகையான நேற்று கோயில் வாயிலிலே பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

குறிப்பாக வாலாஜாபாத் அடுத்த இளையனார்வேலூர் முருகன் கோயிலில், கொரோனா விதிமுறைகளை மீறி அதிகளவில் பக்தர்கள் கூடினர். முடி காணிக்கை செலுத்தி, குளத்தில் குளித்து கோயில் வாசலில் தீபம் ஏற்றி வழிபாட்டனர். முடி காணிக்கை செலுத்தும் இடம் உள்பட பல இடங்களில், விதிமுறைகளை மீறி பக்தர்கள் அதிகளவில் கூட்டமாக இருந்தனர். கொரோனா தொற்று குறையாத நிலையில், பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த இந்து சமய அறநிலையத் துறையும், போலீசாரும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.

Tags : Devotees ,obeisance Devotees ,Murugan temple , Adikkiruttikai, Murugan Temple, Nerthikkadan to pay, curfew violated by devotees, Trust officials, negligence
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...