தூதரக பார்சலில் மத நூல் வந்ததா? விளக்கம் கேட்டு அதிகாரிக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்

திருவனந்தபுரம்: தூதரக பார்சலில் கேரள உயர் கல்வித்துறை அமைச்சரின் அலுவலகத்திற்கு மத நூல்கள் வந்தாக கூறப்படும் விவகாரத்தில் விளக்கம் கேட்டு புரோட்டோகால் அதிகாரிக்கு சுங்க இலாகா நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு பார்சலில் 30 கிலோ தங்கம் வந்தது தொடர்பாக சுங்க இலாகா விசாரணை நடத்தி வருகிறது. இதில், தூதரக அலுவலகத்தில் இருந்து ஏராளமான பார்சல்கள் கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீல் கட்டுப்பாட்டில் உள்ள மாநில அச்சகம் மற்றும் அச்சக பயிற்சி துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இது பற்றி சுங்க இலாகா நடத்திய விசாரணையில், சொப்னாவுக்கும் அமைச்சர் ஜலீலுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து அமைச்சர் ஜலீலிடம் கேட்டபோது, தூதரக பார்சலில் முஸ்லிம் மத நூல்கள் வந்ததாகவும் அவை மலப்புரம் உட்பட பல்வேறு பகுதிகளில் வினியோகிக்கப்பட்டதாகவும் கூறினார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்த சுங்க இலாகா முடிவு செய்துள்ளது. மத நூல் தூதரக பார்சலில் வந்த விவகாரம் குறித்து வரும் 20ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு சுங்க இலாகா, கேரள புரோட்டாக்கால் அதிகாரி சுனிலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. தூதரக பார்சலில் மத நூல்கள் கொண்டுவர முன் அனுமதி பெறப்பட்டதா? என்பது குறித்து விளக்கம் அளிக்கவேண்டும் என்று நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் போன் விவரங்களை வழங்க கோரி பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சுங்க இலாகா கடிதம் அனுப்பியிருந்தது. ஆனால் இதுவரை எந்த விபரமும் அளிக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து போன் விபரங்களை அளிக்காததற்கு விளக்கம் கேட்டு சுங்க இலாகா நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிவசங்கருக்கு தெரியாது விமான நிலையத்தில் தங்கம் அடங்கிய பார்சல் பிடிக்கப்பட்டபோது, அதை விடுவிக்க உதவுமாறு சிவசங்கரை சொப்னா தொடர்பு கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் பர்சலில் தங்கம் இருப்பதாக அவர் கூறவில்லை. ஆனால் அந்த சமயத்தில் சீனாவுடன் பிரச்னை இருந்ததால் சீன பொருட்கள் பெரும்பாலான துறைமுகங்கள், விமான நிலையங்களில் தேங்கி கிடந்தன. இந்த சமயத்தில் தான் பார்சலை விடுவிக்க கூறினால் சிக்கலாகும் என்று சொப்னாவிடம் சிவசங்கர் கூறியுள்ளார். சில நாட்களில் பார்சல் தானாக வந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

* ஜாமீன் மனு ஒத்திவைப்பு

தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது அன்வர், ஷமீம், ஜிப்சல் ஆகியோர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இது நேற்று முன்தினம்  நீதிபதி அசோக்மேனோன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுங்க இலாகா தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘தங்கம் கடத்தலில் தங்களுக்குள்ள தொடர்பு குறித்து இவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஹவாலா பணத்தை திரட்டி வெளிநாட்டுக்கு கொண்டு சென்று, அங்கிருந்து தங்கம் வாங்கி தூதரக பார்சல் வழியாக இந்தியாவுக்கு கடத்தியுள்ளனர். இதில், மேலும் பல கும்பல்கள் ஈடுபட்டிருக்கலாம் என்பதால், கூடுதல் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே, இவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது,’’ என்றார். பின்னர், இதன் விசாரணையை நீதிபதி அசோக் மேனோன் ஒத்திவைத்தார்.

Related Stories: