167 ஆண்டில் முதல்முறையாக டிக்கெட் முன் பதிவால் ரயில்வே கடும் நஷ்டம்: புக்கானதை விட திருப்பி கொடுத்தது அதிகம்

புதுடெல்லி: ரயில்வேயின் 167 கால வரலாற்றில் முதன் முறையாக டிக்கெட் முன்பதிவு கட்டணத்தில் ஈட்டிய வருவாயை காட்டிலும், அதிகளவு கட்டணத்தை ரயில்வே திருப்பி அளித்ததால் நஷ்டத்தை சந்தித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், ரயில்வே வருமானம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை கேட்டிருந்தார். இதற்கு, ரயில்வே அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய் தொற்றின் காரணமாக இந்த நிதியாண்டின் (2020 - 2021) முதல் மூன்று மாதங்களில் ரயில்வேயின் அனைத்து பயணிகள் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக ரயில்வேயின் 167 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில், முதன் முறையாக ரயில்வே துறைக்கு டிக்கெட் முன்பதிவு பிரிவில் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஏப்ரலில் ரூ.531 கோடி, மே மாதத்தில் ரூ.145.25 கோடி மற்றும் ஜூனில் ரூ.390.6 வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பி கொடுக்கப்பட்ட இந்த தொகை அனைத்தும், முன்கூட்டியே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டிற்கான கட்டணமாகும். ஆனால், இந்த 3 மாதங்களில் குறைந்தளவே டிக்கெட்டுகளே முன்பதிவு செய்யப்பட்டன.  

ரயில் சேவை நிறுத்தப்பட்டதால், கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் பயணத்துக்காக முன்பதிவு செய்தவர்கள் கட்டணத்தை திரும்ப பெற்றனர். மேலும், கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக குறைந்த எண்ணிக்கையிலேயே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன. 2019-2020ம் ஆண்டின் முதல் காலாண்டில் ஏப்ரலில் ரயில்வே ரூ.4,345 கோடியும், மே மாதத்தில் ரூ.4,463 கோடியும், ஜூனில் ரூ.4,589 கோடியும் வருமானமாக ஈட்டியது. கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் எதிரொலியாக நடப்பு நிதியாண்டில் ரயில்வே துறைக்கு ரூ.40 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

* சரக்கு சேவையில் வருமானம்

பயணிகள் சேவை இல்லாததால் 2020 -2021ம் நிதியாண்டில் இதுவரை கடுமையான வருமான இழப்பு ஏற்பட்ட போதிலும், சரக்கு போக்குவரத்து மூலமாக ரயில்வே வருமானம் ஈட்டி வருகிறது. கடந்த நிதியாண்டில் ஏப்ரலில் இந்த வருவாய் ரூ.9,331 கோடி, மே ரூ.10,032 கோடி, ஜூனில் ரூ.9,702 கோடியாக இருந்தது.

Related Stories: