கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது லடாக்கில் சீனாவை மிரட்டும் எடை குறைந்த ஹெலிகாப்டர்: அதிநவீன தாக்குதல் திறன் படைத்தது

புதுடெல்லி: லடாக்கில் சீனாவுக்கு பதிலடி கொடுக்க, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உலகிலேயே மிகவும் எடை குறை ந்த இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் களமிறக்கப்பட்டு இருக்கின்றன. கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் மோதலில், 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததால் இந்தியா - சீனா இடையே ஏற்பட்ட மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எல்லையில் குவிக்கப்பட்டுள்ள சீன ராணுவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவும் படைகளை குவித்து வருகிறது. இருப்பினும், எல்லை பிரச்னைக்கு தீர்வு காண, இருநாட்டு ராணுவம், தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.

ஆனால், சீனா தனது படைகளை முழுமையாக விலக்கி கொள்ளாததால், எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. குளிர்காலத்தில் சீனா தாக்குதல் நடத்தலாம் என்ற சந்தேகத்தில், விமானப்படைகளை கூட எல்லையில் இந்தியா தயார்நிலையில் வைத்துள்ளது. இந்நிலையில், இந்திய விமானப்படைக்கு உதவும் வகையில், பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 2 இலகு ரக போர் ஹெலிகாப்டர்களும் லடாக் எல்லைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது தொடர்பாக இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மாதவன் கூறுகையில், “இந்த ஹெலிகாப்டர் உலகிலேயே மிக குறைந்த எடை கொண்டது. அதிநவீன தாக்கும் திறன் படைத்தது. இது, தற்சார்பு இந்தியா திட்டத்தின் முக்கியத்துவத்தை பிரதிபலிப்பதாக உள்ளது,” என்றார்.

இரவிலும் துல்லியம்

* விமானப்படை துணை தளபதி ஹர்ஜித் சிங் அரோரா சமீபத்தில் இந்த ஹெலிகாப்டரில் பறந்து சோதனை நடத்தினார்.

* இது, எல்லாவிதமான காலநிலையிலும் பறக்கும் வல்லமை படைத்தது.

* அதிநவீன ஆயுதங்களையும், தொழில்நுட்பங்களையும் கொண்டது.

* பகல், இரவு என எந்த நேரத்திலும் எதிரியின் இலக்கை மிக துல்லியமாக தாக்கக் கூடியது.

Related Stories: